கல்விரல் – குறிப்பு 4

ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும்  தொகுக்கப்பட்டுள்ளன.  ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இது இவரது சமீபத்திய நாவல்.

இத்தனை வருடங்கள் வாழ்ந்த பிறகு தோன்றும் பட்டறிவு,  இருத்தலைக் காப்பாற்றிக் கொள்வதே எல்லாவற்றிலும் முக்கியமானது. நாம் தனியல்ல, ஒரு குடும்பம் நம்மை நம்பி இருக்கிறது,  கொஞ்சம் அந்த நேரத்து உந்துதலைக் கடந்து விட்டால் எல்லாம் சுகமே.  வேலையில் Risk எடுப்பது, தெருவில் அநியாயத்தைத் தட்டிக்கேட்பது என அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எல்லாவற்றிற்குமே இது பொருந்தும்.  

துளசியை அவளது சின்னமுத்து ஆச்சி புலிகளின் பெருமையைச் சொல்லி வளர்க்கிறாள். துளசி இயக்கத்தில் சேர்கிறாள், தமிழீழக்கனவிற்காகத் துப்பாக்கி ஏந்திப் போராடுகிறள்.  இறுதிப் போருக்குப் பின் சிங்கள ராணுவத்தின் சித்திரவதைக்கு ஆளாகிறாள்.  உடல் நலிந்து, மனம் நலிந்து, உதவாக்கரை புருசனை நம்பி இரண்டு குழந்தைகள் பெற்று, ஒரு வேலையும் செய்ய உடல் ஒத்துழைக்காது, தன்னைச் சுமந்து நடப்பதே பாரம் என்றான துளசி ஒருவேளை வீட்டுக்குள் பதுங்கியிருந்திருந்தால்!  பாலியல் வல்லுறவு நேர்ந்திருந்தாலும் அந்த நேரத்தை மட்டும் பொறுமையாகக் கடந்திருந்தால்…

போரில் தோற்ற இனத்தில் மிஞ்சியவர்களில் போராளிகள் என்பதே கிடையாது. தோற்ற பின்பு நிதானமாக புலிகள் செய்த எல்லாமே தவறு என்று பலர் சொல்லும் தேசத்தில் போராளிகளுக்கு என்ன அடையாளம் இருக்கப் போகிறது. அவயங்களை இழந்தவர்களைப் பார்த்து அசூசையை அடையாமலிருந்தால் அதுவே பெரிய விஷயம்.

பொதுநலத்திற்காகத் தன்னலத்தை இழந்தவர் அடையும் நிர்கதியைப் பறவைக்கோணத்தில் பார்க்கிறது நாவல்.  போராளியே கதைசொல்லியாக வருவதுடன் பொற்புதிர் டீச்சர் பார்வையிலும் போராளியைக் கொண்டு வந்தது நல்ல யுத்தி.  தூமழை இறப்பின் மூலம் தப்பித்துக் கொண்டாள், துளசிக்கு ஆயுள் மீதி இருக்கின்றது.

சின்னவனைக் கதைக்குள் பிரதானமாகக் கொண்டு வந்ததும் நல்ல முடிவு.  ஆனல் அவனது குணாதிசயம் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சீராக வரவில்லை.  கல்லெடுத்தான் குளத்தின் வாழ்வியல் கண்முன் விரிகிறது. கொடிறோஸ் நாவலைப் போலவே இதிலும் குறைந்த வார்த்தைகளில், செறிவான மொழியை நுட்பமாக உபயோகித்திருக்கிறார்.  பெருமூச்சின்றிப் புத்தகத்தைக் கீழே வைக்க இயலாது.

சரவணன் மாணிக்கவாசகம்

கருப்புப்பிரதிகள் 94442 72500

முதல்பதிப்பு ஜனவரி 2026

விலை ரூ.200.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *