மகேஸ்வரன் சேர் : அஞ்சலி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் ஆறாம் வகுப்பிற்குச் சேர்ந்து முதல் நாள் ஆங்கிலப் பாடம். மூன்று அடுக்குகளாக உயர்ந்திருந்த கட்டடத்தில் என் வகுப்பிருந்தது. மகேஸ்வரன் சேர் துணி ஜீன்சும் அரைக்கைச் சேர்ட்டும் போட்டுக் கொண்டு வந்து ஆங்கிலப் பாடம் தொடங்கினார். அவரது உச்சரிப்பு மிகவும் ஆங்கிலத்தனமானது. அவரது நாக்கும் உதடுகளும் சுழன்று மடங்கி ஆங்கில ஒலியை உச்சரிப்பது, கேட்பவருக்குப் புதிய அனுபவமாய் இருக்கும். ஒவ்வொரு நாட்டுப் பாணி ஆங்கிலமும் பேசிக் கட்டுவார். 

அவர் தான் எனக்கும் என் நண்பர்களுக்கும் ஒலிவர் ட்விஸ்ட்டை வாசித்துக் காட்டினார். பதினொரு வயதுச் சிறுவனான எனக்கு அந்த அனாதைச் சிறுவனின் கதை புதியதொரு உலகை உருவாக்கிக் காட்டியது. அன்று நான் ஆங்கிலத்தின் நடையின் சுவையை நான் அறியவில்லை. ஆனால் அதில் இருக்கும் கதையின் உருக்கம் மிக முக்கியமாக இளம் உள்ளங்களைக் கரைக்கக் கூடியது. அவர் அந்தக் கதையை எனக்கு அளித்தது கதைகளின் உலகில் பிறிதொரு கோணத்தில் நுழையும் வாய்ப்பை திறந்தது. அவர் கதையை வாயால் சொன்னார், நான் கதை அப்படிச் சொல்லிக் கேட்கும் வாய்ப்பை அதுவரை பெற்றதில்லை. கதைகளைச் சொல்லும் பாட்டிகள் வாய்க்காத நிலமை. 

அவர் ஆங்கிலத்தை ஆங்கிலேயர்களுக்கு கற்பிக்கக் கூடியவர். எங்கள் பாடசாலையின் முக்கியமான சொத்தாக அவர் இருந்தார். அவரது ஆங்கிலப் பயிற்சியின் விளைவாக அவரது உச்சரிப்பும் பாணியும் கொண்ட ஒரு மாணவர் தலைமுறை உருவாகியது. 

ஒபாமா முதன்முறையாக அமெரிக்காவின் சனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட போது “உலகம் அவரிடம் என்ன எதிர்பார்க்கிறது” என்பதை அடிப்படையாகக் கொண்ட கடிதம் ஒன்றை மகேஸ்வரன் சேர் ஒபாமாவுக்கு அனுப்பியதாக எங்கள் பாடசாலையின் கிரவுண்டில் வைத்துச் சொன்னார். அதற்கு பதில் நன்றிக் கடிதமும் வெள்ளை மாளிகையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தான் ஏன் அந்தக் கடிதத்தை அவருக்கு எழுதினேன் என அவர் விவரித்த போது எனக்கு உலக அரசியல் மேல் எந்த அக்கறையும் இல்லாத காலம். ஆனால் அவர் சொல்லிய தோரணையும் தீவிரமும் இக்கணமும் கண்களுக்குள் நிற்கிறது. அசாத்தியமான சுயமரியாதை கொண்ட உடல் மொழி கொண்டவர். இடுப்பில் கையை ஊன்றி விரல்களை நீட்டிக் கதைக்கும் பொழுதும், மெல்லச் செருமி குதிரை கனைப்பது போலக் குரலை நீவி அவர் வகுப்பில் படிப்பிக்கும் பொழுதும், மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு கவனமாக மறுதரப்பை கேட்கும் பொழுதும் என பல தருணங்களில் அவரது உடல்மொழியை கவனித்திருக்கிறேன். ஒரு ஆசிரியர் தன் இருப்பால் செயலால் தான் முதன்மையான கல்வியை அளிக்கிறார். அவர் அத்தகைய ஒரு ஆசிரியராக இருந்தார். 

பிறகொரு நாள் “basket of fruits” (என்பதாக நினைவு) எனும் தன் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு வெளியாகியிருக்கிறது என்று சொன்னார். நான் அப்பொழுது தமிழில் கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தேன். அதைச் சொன்னேன். உடனே பாராட்டினார். அதன் முக்கியத்துவத்தை பற்றி விரிவாகப் பேசினார். அப்படி இன்னொரு பள்ளி ஆசிரியரிடம் என் வாழ்வில் கற்றதில்லை. Pearl of the ocean எனும் நூலும் வெளிவந்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இன்று அவர் காலமாகிய செய்தியை அறிந்தேன். வசீகரமான அவரது முகமும் உடல்மொழியும் அருகிலெனத் தெரிகிறது. அவரை ஒரு சொத்து என்பதை தவிர வேறு எந்தச் சொற்களில் சொல்வதென்றே தெரியவில்லை. அவரது மாணவர்கள் அனைவரிடமும் ஒரு சிறிய நினைவைத் தன்னும் அவர் கொடுத்திருப்பார். வசீகரமான ஆளுமைகள், தனித்த குணாம்சம் கொண்டவர்கள் அப்படி மனிதர்களில் தாக்கம் செலுத்துவார்கள் என்பதை பார்த்திருக்கிறேன். என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டதாக நான் மேலே சொல்லியிருப்பவற்றை அவர் எந்த விசேட நட்புக்காகவுமோ அல்லது கெட்டிக்கார மாணவன் என்பதற்காகவோ சொல்லவில்லை. அவரைப் பார்க்கும் பொழுதில் அதைச் சொன்னார். நான் அத்தகைய கெட்டிக்காரனாகவோ கவனித்தக்கவனாகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் அப்படி மாணவர்களிடம் சிறிய உரையாடல்களை நிகழ்த்துவார். 

அவரது புலமை குறித்து பொதுவாக மேலோட்டமாக இருந்த மதிப்பிற்கு அப்பால் அவரது ஆளுமையும் திறமையும் சமூகத்தால் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. எல்லா அறிஞர்களையும் மேதைகளையும் போலவே அறிவையும் புலமையையும் முன்னிறுத்தாத, விரிந்த பார்வை இல்லாத சமூகத்தில் ஒற்றை இருப்பாக வாழ்ந்து மறைந்திருக்கிறார். ஒலிவர் ட்விஸ்ட்டை அவர் அறிமுகம் செய்த அந்த முதல் நாள் வகுப்பு இன்னும் ஏன் அத்தனை துல்லியமாய் இருபது வருடங்கள் கழிந்தும் நினைவில் நிற்கிறது என இப்போது தோன்றுகிறது. இனிய ஆசிரியருக்கு என் அஞ்சலிகள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *