நிஜந்தன் : அஞ்சலி

நேற்று மதியம் திடீரென்று என் ATM திறவுஇலக்கம் மறந்து விட்டது. சில கிழமைகளாக காசு எடுக்கவில்லை. எவ்வளவு நினைவில் துழாவியும் இலக்கங்கள் பகடைக் கட்டைகள் போல ஒவ்வொரு முறையும் புதிதாகச் சுழன்று விழுந்தன. நாளிற்கான மூன்று தடவைகளை அழுத்தினேன். மூன்றும் தவறு. தசை நினைவென திறவு இலக்கம் இருப்பது என் வழமை. 

கடந்த இரண்டு கிழமையாக எழுதவும் மனநிலை கூரவில்லை. எழுதவும் வாசிக்கவும் மனம் பாய்ந்து கடிப்பதும் பிறகு கைவிட்டு விலகுவதுமாக அலைக்கழிந்து கொண்டிருந்தது. வெய்யில் உருக்கிக் கொண்டிருக்கிறது. உடல் சோர்ந்து சோர்ந்து வியர்வையாய்க் கரைந்து கொண்டிருக்கிறது. இடையில் காய்ச்சல் வேறு வந்து சென்றது. 

நிஜந்தன் போன கிழமை ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தான். “உன்னுடைய மின்னஞ்சல் முகவரியை அனுப்பு” என்று. நாவலொன்று தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அதைத் தான் அனுப்புவான் எனக் காத்திருந்தேன். இன்று அவனது மரணச் செய்தி வந்திருக்கிறது. 

இளவயது மரணங்களை என் வாழ்வில் ஓயாது சந்தித்துக் கொண்டிருக்கிறேன். மரணங்கள் அளிக்கும் மனநிலைகள் வயதினால் அணுக்கத்தினால் கனவினால் என பலவகைகளில் என்னைத் தாக்குவதுண்டு. ஆதியின் கைக்குழந்தை நன்மிளிர் பிறந்து இருபது நாட்களில் இறந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர் என் தம்பி இறந்தான். பிறகு இப்போது நிஜந்தன். இடையில் என் ஆசிரியர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்தார். அதற்கு முன்னர் என் நாவல் தொடர்பில் உரையாடி வந்த காலச்சுவட்டின் பதிப்பாசிரியர் டி. ஐ. அரவிந்தன் இறந்தார். வாழ்க்கை என் முன் சீட்டுக் கட்டைக் குலைத்து காற்றில் எறிந்து திரும்ப எடுத்து கண்டபடி அடுக்கிவிட்டு நீட்டுவது போலிருக்கிறது. 

நிஜந்தனை பத்து வருடங்களுக்கு மேல் தெரியும். என் நண்பர்களின் நண்பனாக அறிமுகமானான். இலக்கிய வாசகன். கூர்மையனவன் என சொல்லப்பட்டிருந்தான். அது மெய். சுவாரசியமானவன், தீவிரமானவன், அன்பானவன், நெகிழ்பவன். அவனது நோய் நிலமை காரணமாக அடிக்கடி காசு கேட்டுப் பதிவுகள் போடுவான். அதை எண்ணிக் குற்றவுணர்வும் படுவான். ஆனால் அவனுக்குப் பலரும் உடனிருந்தார்கள் என்றே எண்ணுகிறேன். நான் சில முறை பணம் அனுப்பினேன். யதார்த்தன் அவனுடன் நெருக்கமான நட்புக் கொண்டிருந்தான். அவன் மூலமாகவும் நிஜந்தனைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். 

‘டா’ என மெசேஜ் அனுப்புவான். அது தான் அவனது உலகில் ‘ஹாய்’. என் கதைகளைப் படித்து விட்டு உரையாடுவான். அவனுக்குள் மோதி வெடிக்கத் துடிக்கும் ஒரு ஆன்மா இருந்தது. அதன் தீவிரம் ஒரு கணத்தில் நெருப்பைப் போலக் கனன்று எதிர்கொள்வது. அதே கணத்தில் அன்பென மாறி நேர் நிலை கொள்வது. அவனது பிறழ் நாவல் வந்த வேளை அதை ஒரு குறுநாவல் என்று சுட்டி அதன் முக்கியத்துவங்களை எழுதியிருந்தேன். நாவலை முன்னரே அனுபியிருந்தான். அவனது மொழி கூருணர்வு கொண்டது. ஆனால் நாவலாகச் செம்மையாக்கப்பட்டு எழுதி எடுக்கப்பட்டிருக்க வேண்டியது என்று தனிப்பேச்சில் சொல்லியிருந்தேன். தனக்கும் அந்தக் குழப்பங்கள் இருந்தது என்றான். அடுத்த நாவலில் செம்மையக்கத்துக்கு உதவுகிறேன் என்றேன். யதார்த்தனும் தர்மு பிரசாத்தும் நானும் அவனும் ஒரு குரூப் போட்டோம். அதில் அவன் மட்டும் சில கேள்விகள் கேட்பான். பதில் கொடுப்போம். நாவல் எழுதி அனுப்பியிருந்தால் அதில் விரிவாக விவாதிப்பதாக திட்டமிருந்தது. 

கல்விரல் வாசித்து விட்டு வைத்தியசாலை பெஞ்சிலிருந்து அழைத்தான். கொஞ்ச நேரம் பராட்டிவிட்டு பரபரவென தன் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினான். ஓர் ஆர்வமுள்ள மாணவனின் குரலும் மனமும் கொண்டவன். அவனால் யாரிடமும் கற்றுக் கொள்ள முடியுமென்று தோன்றுகிறது. 

அவனது நோய் நிலமையை இலக்கியம் மூலம் வென்று விடலாம் என நான் நம்பியிருந்தேன். அது ஒரு தெய்வம் என்று அவனுக்குச் சொல்லியிருந்தேன். விக்கி விக்கிச் சிரிப்பான். கடைசியாகச் சில சிறுகதைகளை எழுதியிருந்தேன். அவற்றை வாசித்து விட்டு மெசேஜ் அனுப்புவான். வைத்தியசாலையில் இருக்கிறேன், வந்து சுருட்டைக்கு ஒரு குறிப்பு எழுதி பகிர்வேன் என்றான். அதற்கு சில நாட்களுக்கு முன்னர் பண உதவி கேட்டு பதிவொன்றை பகிர்ந்திருந்தான். அவனது நாவல் வெளியாகி சிறந்த கவனிப்பை பெற்றிருந்தது. அவனுக்கு சூழல் மிகையான கருணையைக் காட்டுகிறது என நான் முதலில் எண்ணியிருந்தேன். அவனது நாவலின் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டு உரையாடினால் அவன் புரிந்து கொள்வான். அடுத்த நாவலில் மேலெழுந்து விடுவான் என எண்ணினேன். ஆனால் போன புத்தகச் சந்தையில் அவனுடனிருந்த அத்தனை எழுத்தாளர்களையும் இப்போது மனதாரப் பற்றிக் கொள்கிறேன். அவனுக்கு வேண்டியதைச் செய்தீர்கள். அவனுக்கு அன்று அது நிகழ்ந்திருந்தது என இன்று நினைக்கையில் உள்ளார்ந்து கண்ணீர் பெருகுகிறது. ஒரு இளம் எழுத்தாளனுக்கு சூழல் அளித்திருக்கக் கூடிய வழக்கமான புறக்கணிப்புக்கு அப்பால் இதயத்துடன் நடந்து கொண்டார்கள். அல்லது அவன் அப்படி அவர்களைத் தொட்டு அணைக்கக் கூடியவன் என்றும் நினைக்கிறேன். 

இந்த நாள் கடினமாக இருக்கிறது. உருக்கும் வெய்யில் தெரியவில்லை. ஆனால் நினைவுகள் குழம்புகின்றன. அவன் வென்றமைய நாம் காத்திருந்தோம். மானுடம் அடையக் கூடிய உச்சத்தில் அவன் முழுதாகத் திகழ்ந்து தனக்கு நிகழ்ந்த அநீதிகளிலிருந்து விடுபட்டுக் கொள்வான் என எண்ணியிருந்தோம். நிகழவில்லை. அவன் அதன் வாசலில் வண்ணத்துப்பூச்சி ஒன்றை பார்த்து சிரித்து விட்டு வசீகரமாக எங்களைக் கவனிக்க வைத்து விட்டு இருட்டுக்குள் ஒழிந்து விட்டவன். 

சிநேகா பெல்சினின் நினைவுகளும் உடன் எழுகிறது. வீட்டில் பிரிந்தா, காவ்யா, திவ்யா எல்லோரும் சிநேகாவின் விசிறிகள். அவருடன் கதைப்பார்கள். அவர் இறந்த அன்று இதே போன்ற மனநிலை தான் இருந்தது. அவரும் அவனைப் போலவே வென்றமைந்திருக்க வேண்டியவர். 

காலையில் எழுந்த போது யதார்த்தன் நிஜந்தன் இறந்த செய்தியை அனுப்பியிருந்தான். திடீரென்று என் ஏடி எம் திறவு இலக்கம் ஞாபகம் வந்தது. நான் எண்ணி எண்ணி மறந்து வைத்திருப்பது அதைத் தான். மரணம் எனும் கணக்கு. 

போய் வா நிஜந்தன். 

இணைப்பு : முதற் கனவின் வெம்மை

கல்விரல் : நிஜந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *