நிஜந்தன் தோழன்

நிரப்புவதற்கு அப்பால் நின்றுவிட்டது
தூரம்
முதலில் உன்னைத் தின்றுவிட்டிருக்கின்றன
இருவரில்
ஒன்று போலிருந்த காயங்கள்
மிச்சம்
பேசியிருந்த கொஞ்ச வார்த்தைகள்,
இனியில்லை
மருந்துகளுக்கும் வலிகளுக்கும்
மேலால் மேவி எழுகிற புன்னகை.
அறியு முன்பே
நழுவிவிட்ட முகமும் குரலும்,
சற்றுத் தாமதமாகவே வென்றிருக்கலாம் நீ
உந்த வாழ்வையும்
இந்தச் சாவையும்
இனியில்லை உனக்கு
இருண்டகாலத்துக் குரல்கள்,
நித்திய விடுதலை,
சமாதானிக்கட்டும் உனது வெண்மை.
இல்லாது போன
கருணையின் பாகங்கள் பொருட்டு
இன்னும் கொஞ்சம் கண்ணீர்.
ஒருநாள் வருவேன்
உனது குரல் தொடுகிற தெருவில்
மருந்து மணக்காத தாழ்வாரங்களில்
குமிழ் எரிகிற இருளில்
அவ்வப்போது கொள்கிற மாத்திரைகளில்
சரிகிற புத்தகங்களில்
கசிகிறதுனது குரல்
போய் வா,
பூரணம்!
கமலாபரன்

