Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

தீபச்செல்வன் மீது பொறாமையா? 

Posted on April 22, 2026April 22, 2026 by Kiri santh

தீபச்செல்வன் தனது புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எழுதிய கடிதத்தில் வெளிப்பட்டிருந்த தயக்கத்தையும் கோணலையும் சுட்டிக்காட்டி எனது தளத்தில் தீபச்செல்வன் ஒரு கண்டனம் எனும் குறிப்பை எழுதியிருந்தேன். அதை பலரும் ஒரு வஞ்சமாகவோ புலிகளை எதிர்க்கும் மனநிலையாகவோ தமிழ்த்தேசியத்துக்கு எதிரானதாகவோ பொறாமையாகவோ தான் கருதியிருக்கிறார்கள் என்பதை சில உரையாடல்களில் அறிய முடிந்தது. 

மீண்டும் அதைத் தொகுத்துச் சொல்கிறேன், தீபச்செல்வன் அமைச்சுக்கு எழுதிய கடிதத்தில் இரக்கம் கோரும் பாவனை இருந்தது. அப்பதிவை வாசிப்பவர்களுக்கே அது புரியும். ஆனால் நான் எழுதிய போது அது ஒரு போதும் தீபச்செல்வனின் கருத்துரிமையையோ வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையோ பறிக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கவில்லை. அவருடைய இலக்கியத் தகுதி மதிக்கப்படும் அளவு, அவருடைய இலக்கிய இடம் தொடர்பான என் மதிப்பீடு மட்டுமே நான் கோடிகாட்டியிருப்பது. எந்த ஒரு எழுத்தாளர் மீதும் அப்படி ஒரு வஞ்சத்தையோ பொறாமையையோ கொள்ளும் இடத்தில் நான் இல்லை. என்னுடைய இடமும் தீபச்செல்வனின் இடமும் காலத்தின் கருணையே இல்லாத உரசுகல்லில் மதிப்பிடப்பட்டு செல்லும். அதை நான் அறிவேன். 

இப்பொழுது அரசு தீபச்செல்வனுக்கு பதிலளித்திருக்கிறது. திமிர்த்தனமாக சிங்கள மேட்டிமைவாத பார்வையுடன் அது வெளிப்பட்டிருக்கிறது.  இனப்பிரச்சினையையும் இனப்படுகொலையையும் இந்த அரசு எவ்வகையிலும் கவனம் கொள்ளவில்லை என்பதே என் அவதானம். அரச நிர்வாக கேடுகளை காஸை, பெற்றோலை, சில சமூக வலைத்தள ஸ்டண்டுகளை, குழந்தைகளுடன் போட்டோக்களை போட்டு ரொமாண்டிக் அரசியல் தான் செய்கிறது. இது வெகுசன அரசியலின் பிரபல்ய வகை அரசியல் சார்ந்தது. பண்ணைக் கடலில் இலங்கையின் தேசியக் கொடியைக் குற்றிய போது அது தெளிவான காட்சியை எனக்குச் சொல்லியது. அதனால் தான் தீபச்செல்வனின் மென்மையான கடிதத்தை நான் வெறுத்தேன். திமிரோடும் சுயமரியாதையோடும் அவரது குரல் வெளிப்பட்டிருக்க வேண்டும் எனச் சொன்னேன். 

எனக்கு தீபச்செல்வனை பல ஆண்டுகளாகத் தெரியும். அவரை அண்ணை என்று அழைக்கும் உரிமையுடன் தான் பழகி வந்திருக்கிறேன். இலக்கியத்தில் ஒருவரை ஒருவர் ஏசுதல், கடித்தல் எல்லாம் அன்றாடமானது. எந்தக் காலத்திலும் நான் என்னுடைய தரப்பையோ அவர் அவருடைய தரப்பையோ விட்டுக் கொடுக்கும் நிலையில் இருக்கவில்லை. அது தான் அழகு. அடிப்படை. அவருடைய பங்களிப்பு என்ன என்பதை நான் சுருக்கமாக இப்படிச் சொல்கிறேன். அவர் யுத்தத்தின் இறுதிக்காலத்தில் ஒரு ஊடகவியலாளராக எழுதிய கட்டுரைகளில் வெளிப்பட்ட சீற்றம் ஒரு கவிஞனுடையது. அது முக்கியமானது. அவருடைய கவிதைகளில் சில எனக்குப் பிடித்தமானவை. 

(நானும் தீபச்செல்வனும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கிளிநொச்சியில்)

இதற்கு அப்பால் அவருடைய எழுத்தில் பல இடங்களில் எனக்கு மாற்றுப் பார்வைகள் உண்டு. அடிப்படைச் சிக்கல்கள் உண்டு. ஆனால் அவர் ஒரு தரப்பு என எப்போதும் மதித்து எதிர்வினையாற்றி வந்திருக்கிறேன். 

இப்பொழுது அரசு அளித்திருக்கும் பதில் எனக்கு சினத்தையே கொடுத்தது. என்ன எழுத வேண்டுமென முடிவெடுக்கும் எந்த அதிகாரமும் அரசுக்கு இருக்கக் கூடாது என நான் கருதுகிறேன். இவர்களின் சிந்தனைக்கெல்லம் எழுதுபவர் எழுத்தாளராக முடியாது. இந்த அரசு தன் போலி முற்போக்கு முகமூடியை காட்டி நெடுநாளைக்கு தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. 

தீபச்செல்வனுக்கு நிகழ்ந்திருப்பது தான் ஷோபா சக்திக்கும் நிகழ்ந்தது. ஷோபாவின் நூல் நேரடியாக ஒரு படுகொலை ஆவணம். தன் எதிர்த்தரப்பான கடந்த கால அரசாங்கங்களின் படுகொலை வரலாற்றை மறைக்கும் இந்த அரசு தமிழ் மக்களுக்கு நீதியென எதைக் கொடுத்து விடும்? 

தீபச்செல்வனுடைய நூல்கள் தடை செய்யப்பட்டது உள்ளபடியே கண்டிக்கத்தக்கது. எனது கண்டனங்கள். அந்த நூல் வாசகர்களுக்கு கிடைக்க வேண்டும். அரசாங்கம் தன் கொள்கையை மறுசீரமைக்க வேண்டும். இதையொட்டி கவனம் கோரி முகநூலில் பலரும் ஆதரவு தெரிவித்ததை அறிந்தேன். எனது ஆதரவும் தீபச்செல்வனின் நூல்கள் சுதந்திரமாக வெளியாக வேண்டும் எனும் தரப்பிற்கே. 

பல வருடங்களுக்கு முன் பெருமாள் முருகனின் நூல் தடை செய்யப்பட்ட போது தமிழ்நாட்டில் ஏராளம் போராட்டங்கள் நடைபெற்றன. கண்டனக் கூட்டங்கள் நிகழ்ந்தன. எதிர்ப்பு நடவடிக்கைகள் பரவலாகின. புலம்பெயர் ஈழத்தமிழர்களும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர். எனது முதலாவது பொது வெளிப்போராட்டம் அதுவே. யாழ்ப்பாணம் நூலகத்தின் பின் வாயிலில் பத்துப் பேர் நின்று பனரைப் பிடித்து கைகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் செய்தோம். அது அப்போது இந்துப் பத்திரிகையில் செய்தியாகவும் வெளியகியிருந்தது. அத்தகைய தொடர் நடவடிக்கைகள் இரண்டு வகையில் முக்கியமானது. 

ஒன்று, எழுத்தாளர் ஒருவர் தன்னைத் தனியனாக கைவிடப்பட்டவனாக உணர ஒரு சமூகம் அனுமதிக்கவே கூடாது. அது தன் உணர்கொம்புகளை நாயிடம் கடிவாங்கக் கொடுப்பது போன்றது. எழுத்தாளர் சமூகத்தின் நுண்ணுணர்வு மிக்க தரப்பு. அவரது கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியது. என் பார்வையில் சாமானியரையும் சராசரிகளையும் விட ஒரு படி மேலாகவே அவர் பாதுகாக்கப்பட வேண்டியவர். தீபச்செல்வன் நம் மொழியில் தொடர்ந்து எழுதி வருபவர். அவரது எழுத்தின் மூலமே அவருக்கான இடத்தை ஈட்டிக் கொண்டவர். அவருக்கு நாம் துணையாயிருப்பது அவசியம். அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று திரும்பும் ஒளிப்படம் பார்த்தேன். அப்படித் தனியனாக அவர் வந்திருக்கக் கூடாது. அவருடன் ஒரு எழுத்தாள, வாசகத் தரப்பு உடனிருக்க வேண்டும். களத்தில் நின்றிருக்க வேண்டும். அவரது பிரச்சினை அவரது சொந்தப் பிரச்சினையில்லை. மொத்த சமூகத்தினதும் சுயமரியாதையும் பண்பாட்டு அறிவு சார்ந்ததுமான பிரச்சினை. 

வெண்முரசில் ஒரு காட்சி வரும். முறைதவறிய ஒரு அரசனின் நாட்டிலிருந்து காலடி மண்ணையும் துடைத்து விட்டு ஒரு பாணர் கூட்டம் வெளியேறும். ஒரு கவிஞர், எழுத்தாளருக்கு ஒரு சமூகத்தில் இடமென்பது தன்னுடைய சொந்த அகச்சான்றுக்கு அவர் உண்மையாக இருக்கிறாரா என்பதில் மட்டும் தங்கியிருப்பது. அவர் சமூகம் ஏற்காத எதையும் சொல்லலாம். அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. அக்காலத்திற்கு தவறாக இருப்பது போல சராசரிகளுக்குத் தோன்றலாம். ஆனால் அவர் தன் நெஞ்சு சொல்ல விழைவதை மட்டுமே சொல்ல வேண்டும். எது நேரிடினும் அந்தக் குரலுக்கு மட்டுமே செவி சாய்க்க வேண்டும். அதுவே அகச்சான்று. ஆதலால் அவர் எந்த அரசுக்கும் கட்டுப்பட்டவரல்ல. இருக்கக் கூடாது என்பது அதனாலேயே.

இரண்டாவது கோணம், இது ஒரு பொதுப்பிரச்சினை. மக்கள் எதிர்வினையற்ற வேண்டிய நேரம். நான் குடிமக்களில் ஒருவராக நின்றே இதைச் சொல்வேன். எழுத்தாளனாகவும் நான் அந்த இடத்தையே தேர்வு செய்வேன். ஆகவே தான் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நின்றேன். கொடி பிடிதேன். தீபச்செல்வனோ என் மண்ணின் கவி. அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் கருத்துத் தளத்தில் மட்டுமல்ல, களத்திலும் இறங்கிப் போராடுவேன். அது தான் கவிஞர்களினதும் கலைஞர்களினதும் அடிப்படைக் கடமை. என் எல்லாக் காலங்களிலும் நான் அதைச் செய்திருக்கிறேன். அதற்காக வசை பாடப்பட்டிருக்கிறேன். அவதூறு செய்யப்பட்டிருக்கிறேன். அதெல்லம் பொருட்டே இல்லாதவை. சாம்பலாக உதிர்ந்து விட்டவை. 

தீபச்செல்வனுக்கு ஆதரவாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என்றல்ல, கொழும்பு முதல் நாம் கண்டனப் போராட்டங்களை ஒழுங்கு செய்ய வேண்டும். அவன் எங்கள் மொழியின் கவியென ஆயிரக்கணக்கில் திரண்டு கூவிச் சொல்லிட வேண்டும். இந்த அரசு அஞ்சக் கூடியது களச் செயற்பாடுகளுக்கு மட்டும் தான். சமூக வலைத்தள ஆதரவு போதாது. யாழ் பல்கலைக்கழகத்தின் உயிர்ப்பு மிக்க பங்களியாக, பழைய மாணவனாக தீபச்செல்வனுக்கு ஆதரவாக மாணவர் ஒன்றியம் போராட வேண்டும். மொழியுணர்வை வெளிப்படுத்த வேண்டும். அரசின் செயலைக் கண்டிக்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய தடைகள் எந்த எழுத்தாளருக்கும் நேரக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும். 

எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், ஆதரவுத் தரப்பினர், மக்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் நகர மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் கிளிநொச்சியில் கந்தசாமி கோயிலுக்கு முன்பாகவும் வரும் ஞாயிறு காலை பத்து மணிக்கு  வழக்கமாகப் போராட்டம் நடத்தும் இடங்களில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கிறேன். ஒரு எழுத்தாளனாக, சக குடிமகனாக. 

யாரும் வராவிட்டாலும் கூட நான் ஏதாவது ஒரு மாவட்டத்தில் தனியாகவாவது கையில் போஸ்ட்டரை பிடித்து நிற்பேன். அதுவே நான் ஒவ்வொரு போராட்டதின் போதும் கண்டு கொண்டது. அந்த நம்பிக்கை போதும். எழுத்துச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டியது அடிப்படையான நோக்கம். தீபச்செல்வனுடையது மட்டுமல்ல, ஷோபா சக்தியின் லைடன் தீவு படுகொலைகள் தொடர்பான ஆவண நூலும் தடை நீங்க வேண்டும் என்ற கோரிக்கையையே நான் வைப்பேன். அவரவர் தரப்பில் நின்றபடியே நாம் போராடலாம். தீபச்செல்வனுடையதும் ஷோபா சக்தியினுடையதும் நூல்கள் நாட்டிற்குள் தடையின்றி வர வேண்டும். நான் ஒரு குரலாக மட்டுமே இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். அரசுக்கு எதிராக எழுந்து நிற்பதில் ஒரு எழுத்தாளனாக நான் கர்வம் மட்டுமே கொள்வேன். கேளடா மானுடா எனச் சொன்ன மூப்பரின் வாரிசாக மட்டுமே என்னை முன் வைப்பேன். மான உணர்ச்சியுள்ளோர், வருக, எழுக. 

கிரிசாந்

முகப்பு படம் : சங்கர் சிறீ என்பவரின் முகநூலிலிருந்து எடுக்கப்பட்டது.

என்னுடையதும் தீபச்செல்வனினதும் ஒளிப்படத்தை எடுத்தவர் சன்சிகன்.

வாசித்தவர்கள் : 259

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,171)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,009)
  • காதலின் முன் பருவம் (2,000)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,910)
  • விடுதலையில் கவிதை (1,894)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme