Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

அற்பத்தனத்தை அகங்காரத்தால் எதிர்கொள்ளல்

Posted on April 25, 2026May 31, 2026 by Kiri santh

 

நாளைய தினம் தமிழ் புத்தகங்கள் மீது இலங்கைச் சுங்கம் காட்டி வரும் தடுத்து வைப்பு / தடை நிலமையைக் கண்டிக்கும் போராட்டம் ஒன்றை நிகழ்த்த சில நாட்களுக்கு முன்னர் நானொரு அழைப்பை என் தளத்தில் எழுதியிருந்தேன். வரும் ஞாயிறு காலை பத்து மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி கோயிலின் முன்பாகவும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் ஒன்று கூடுமாறு கோரியிருந்தேன். ஒரு எழுத்தாளனாக, சக குடிமகனாக. யாரும் வராமல் விட்டாலும் தனியாக நின்று கொடி பிடிப்பேன் எனச் சொல்லியிருந்தேன். தீபச்செல்வனின் புத்தகங்கள் இரண்டை விடுவதாகவும் இரண்டை தடுத்து வைப்பதாகவும் சுங்கம் சொல்லிய போது உள்ளபடியே சினத்துடன் அன்றிருந்த உள வேகத்தில் அப்படி எழுதியிருந்தேன்.

நண்பர்கள் அக்கூட்டத்தை ஒருங்கிணைக்கலாம் எனச் சொல்லினர். எழுத்தாளர் கருணாகரன் இது தொடர்பில் கதைத்தார். கிளிநொச்சியில் இருக்கும் எழுத்தாளர்கள், மதகுருக்கள் இணைந்து ஒரு சூம் கூட்டத்தை நடாத்தியிருந்தனர். அதில் தீபச்செல்வன், ஷோபா சக்தி, ரயாகரன் போன்று சுங்கத்தால் தங்கள் புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். கூட்டத்தில் ஷோபாவும் ரயாகரனும் தங்களுடைய கோணங்களை முன் வைத்தனர். கூட்டத்தின் முடிவின் படி காலை பத்து மணிக்கு கிளிநொச்சி, யாழ்ப்பாணம் இடங்களும் இறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை தயாரிப்பும் முடிவெடுக்கப்பட்டது. அறிக்கையை இன்று காலை முடித்தோம். தற்போது அது முகநூலில் வெளியாகியிருக்கிறது.

இந்த நேரத்தில் கிளிநொச்சியில் “தமிழ் எழுத்தளர்களின் புத்தகத் தடைக்கெதிரான” என்ற பதாகையின் கீழ் நிகழவிருந்த போராட்டத்தை அரசியல்வாதி சிறீதரன் அணியினர் ஹைஜாக் செய்து ஒற்றை அடையாளத்துடன் “தீபச்செல்வனின் புத்தகங்களுக்கு எதிரான தடை” என்பதாக ஒரு விளம்பர போஸ்ட்டரை முகநூலில் பகிர்ந்துள்ளனர். சிறீதரனே தனது முகநூலில் அதைப் பகிர்ந்துள்ளார்.

உள்ளபடியே இது அற்பத்தனம். போராட்ட நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அறிவித்திருக்கின்றனர். இவ்வளவு நாளாக தொடர் விவாதத்திலோ தடை நீக்கும் செயலிலோ எந்த வகையில் இந்த அரசியல்வாதியின் தரப்பு குரல் கொடுத்திருக்கிறது? உள்ளார்ந்து இணைந்திருக்க வாய்ப்புண்டு. தீபச்செல்வன் தொடர்ச்சியாக அரசியல்வாதிகளை அல்லது அதிகாரத் தரப்புகளை அண்டியே செயற்பட்டு வருபவர். நான் அதை என் முதலாவது கண்டனத்தில் தெளிவாகச் சுட்டியே எழுதியிருந்தேன். இலக்கியம், எழுத்து, எழுத்தாளர் என்றால் என்ன மண்ணென்றாவது தெரிந்த ஒருவர் கூட தன் நூல் வெளியீடுகளிலோ எழுத்தின் தரப்பிலோ அரசியல்வாதிகளை முன்வைப்பதில்லை. தீபச்செல்வனின் இத்தகைய அரசியல் ஆதரவுக் காரணங்களுக்காக அவரது புத்தகங்கள் நாட்டுக்குள் வருவதை சுங்கம் தடுக்க முடியாது எனும் நிலைப்பாட்டில் இருந்தே நான் எனது ஆதரவை தெரிவித்தேன். எதிர்வினையற்றினேன்.

ஆனால் அரசியல் அற்பர்கள் இன்று செய்திருப்பது அரசியல் ஆதாய வேட்டையின் இன்னொரு எச்சைச் செயல். இவர்களுக்கு மெய்யாகவே நாணமிருப்பதில்லையா? வெறும் வாக்கு அரசியலுக்காகவும் அரசியல் அதிகாரத்தை நாய் மூத்திரம் பெய்து இடம் பிடிப்பதைப் போலப் பிடிக்கவும் மட்டும் தானா முடியும்?

அரசியல்வாதிகள் எழுத்தாளர்களுக்காகப் போராடக் கூடாதா எனக் கேட்டால், வேண்டும் என்பதே என் பதிலும். ஆனால் அது அவர்களின் சொந்தச் சிந்தனையிலிருந்து வந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அப்படியொரு சிந்தனையும் வந்திருக்கவில்லை. வழக்கம் போல இது ஒரு இனவாத அரசு என பழைய மாவை அரைத்துக் கொண்டிருப்பது சுலபம். தன் வலக்கையை முன் வைத்துக் கூச்சலிடுவது எளிது. நாம் எழுத்தாளர்கள், எங்களது பணி பண்பாட்டுத் தளத்தில் இருப்பது. அரசை மட்டுமல்ல, அரசியல்வதிகளை மட்டுமல்ல, மக்களை நோக்கியும் கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பவர்கள். எங்களுக்கு சுயமரியதை வேண்டாமா?

இலக்கியம் எனக்குச் சொல்லித் தந்த முதன்மையான குணாம்சம் நிமிர்ந்து நில் கூனாதே என்பதே. எனக்கு தீபச்செல்வனைப் போல அரசியல் தரப்புகளுடன் அண்டி நின்று கூன வராது. எல்லோருடைய ஜனநாயக உரிமைக்காவும் மட்டுமே நான் ஒரு எழுத்தாளனாக நின்று குரல் கொடுப்பேன். இப்போதும் கொடுப்பேன். ஆனால் முன்னர் கிளிநொச்சி செல்வதாக இருந்தேன். இப்போது மாட்டேன். அவர்கள் போட்டு விட்டுப் போகும் எஞ்சிய தண்ணீர்ப் போத்தல்கள் மீது நின்று ஷோபா சக்திக்கும் ரயாகரனுக்கும் டிலுக்சன் மோகனுக்கும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நூல்களுக்குமாகச் சேர்த்து நான் ஒலிக்க மாட்டேன். அதற்குப் பதில் எங்கேனும் சாக்கடையில் புழுவாய் நெளியலாம்.

நான் நாளை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக, ஏற்கெனவே நாம் ஒன்றுபட்ட கோரிக்கையின் பதாகையின் கீழ், வெளியிட்ட அறிக்கையின் பரந்து பட்ட சிந்தனையின் அடிப்படையிலேயே போராட்டத்திற்குச் செல்கிறேன்.

தீபச்செல்வன் மட்டுமல்ல தமிழ் எழுத்தாளர், அவர் தமிழில் எழுதுகிறார் என்பதற்கு அப்பால் என்ன இலக்கியத் தகுதி கொண்டிருக்கிறார்? ஆவேசக் கூச்சலுக்கா? நாணமற்ற தன்முனைப்புக்கா? இன்று வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு எழுத்தாளரின் பெயரையோ நூலின் பெயரையோ கூட உச்சரிக்காத கீழ்த்தரமான மனநிலைக்கா? அல்லது தான் தான் ஒட்டு மொத்த தமிழ் எழுத்தாளர் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறாரா?

அவர் ஒருவரின் புத்தகத்தை தான் தேடித் தேடி அரசு தடை செய்ததா? ஒரு வெங்காயமும் இல்லை. அவரும் ஒருவர், அதிலும் கடையர். சுங்கம் ஒரு முட்டாள்த்தனத்தை செய்து அவரை பிரபல்யப்படுத்தியிருக்கிறது. அதற்கு மிஞ்சி அதில் பொருளில்லை. ஷோபா சக்தியின் நூலைத் தடை செய்வதிலாவது சிறிய நியாயம் அரசுக்கு இருக்கலாம். அது நேரடியாகவே எம் நிலத்தில் நிகழ்ந்த கூட்டுப் படுகொலையொன்றை சாட்சியபூர்வமாக ஆவணப்படுத்திய புத்தகம். அது அரசுக்கு தலையிடியைக் கொடுக்கலாம். தீபச்செல்வன் எழுதும் போலி உணர்ச்சிகரக் கூச்சல்களின் காலம் எப்பொழுதோ முடிந்து விட்டது. வேண்டுமானால், “அதை உள்ளே விடுங்கள், ஒன்றும் நடக்காது” என அரசுக்கு ஒரு ஆலோசனை சொல்லலாம்.

பொதுப்படையாகத் தமிழ் எழுத்தாளர்கள் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள் எனச் சொல்லும் தீபச்செல்வன், கார்ட்டூன்களைப் பகிருமவர், நேர்காணல்களைக் கொடுக்குமவர், என்றேனும் அவர்கள் பெயர்களை முன் வைப்பாரா? மாட்டார்! இது தீபச்செல்வனின் அற்பத்தனம் மீண்டுமொருமுறை வெளிப்படுத்தப்பட்ட இடம் என்பதற்கு அப்பால் என் புறங்கையால் அவரை விலக்கி விட்டு நகர்வேன். ஆனால் நாளை அவரது நூல்களும் விடுவிக்கப்பட வேண்டும் எனவே கோருவேன். இலக்கியம் சொல்லித் தரும் இன்னொரு அடிப்படையான பண்பொன்றுண்டு. ஜெயகாந்தன் சொல்வார், அற்பத்தனத்தை அகங்காரத்தால் எதிர்கொள்க என்று. மேலுமொன்றுண்டு, சிறுமையை விரிவால் வெல்க.

நாளை களத்தில் சந்திப்போம். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நூல்களையும் விடுதலை செய்க, சட்டச் சீர்திருத்தத்தை செய்க, கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துக, வருக. எழுக.

கிரிசாந்

வாசித்தவர்கள் : 148

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,171)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,009)
  • காதலின் முன் பருவம் (2,000)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,910)
  • விடுதலையில் கவிதை (1,894)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme