என் தந்தையின் வீடு: கடிதம்
கிட்டதட்ட 2008 மாவீரர் உரையின் மிச்சம் எதிர்கால சந்ததியிடம் இந்த போராட்டத்தை கையளிப்பதாக பாலசந்திரன் தந்தை சொன்னது தான். பிளவுகளில் வரும் போதிமரங்களில் மெதுவாக வந்து தியானம் இருக்கும் புதிய தோரோக்களையும் உலக ஒழுங்கு சந்தையில் வந்தாடும் துவாரகாக்களுக்கும் எதையோ சொல்ல வருகிறது என்பதை விட இதைதான் சொல்கிறது அந்த ஆன்மாக்களின் வீடு பேறுக்காக யாகங்களை செய் என் இனமே என்று எதிர்காலத்திடம் கதறும் ஒரு நிகழ்கால புதுவையின் களக்கானம் தான். கடல் பிளந்து ப்ரோனுக்கு வழிவிட காரணம் இருந்தது கவிஞரே அங்கே மோசே என்ற மனிதனும் மதம் என்ற கொள்கையும் இருந்துது.
வலியைமட்டும் சுமந்து வந்த அந்த மனிதர்களிடம் என்னதான் இருந்தது என்பதாலோ என்னவோ இந்தக் கடல் நந்திக் கடல், நந்திக் கொடி கொண்ட எங்களின் மதங்களில் நம்பிக்கை இழந்து தான் இருந்தது. ஒரு வெளிவிகார கொள்கை இல்லை பெருளாதார கொள்ளகை இல்லை அப்படி பிரயோசனம் அற்ற இனத்துக்காய் தான்கடலும் விரிவதில்லை போல.. கழுகாக இருந்த எமக்கு இந்த சிட்டுகுருவிகளின் வாழ்கை ஒத்து வரவல்லை. அதனால் கற்பனையில் கூட அதை பற்றி அவர்களிடம் கேட்க மறுக்கிறது மனம். வீடுபேற்றுக்காய் இன்னும் புத்தனின் பாதங்களில் தவம் இருக்கும் அரசியல் தலைமைகளின் தூதுவராலய உதவிகளும் தியானங்களும் நிறுத்தப்படும் வரை மறைந்த தந்தையின் இருப்பு பற்றி ஏங்கும் புதல்வனாய் இருப்பதா இல்லை இன்னம் ஒரு தலைவனை உருவாக்க என் இனத்தினை சரி செய்வதா?
முற்று பெறாத நன்றி உணர்வாக.
– Rtr kirishanth –
வணக்கம் கிரி,
அரசியல் கவிதைகள் மக்கள் மனதின் கூட்டின் ஒரு பகுதியாகத் தன்னை உணருங் கணங்களில் எழுபவை. யுத்தம் முடிவடைந்த பின் 2013 ஆம் ஆண்டளவில் முதன்முறையாக இறுதி யுத்தம் நடந்த பூமிக்குச் சென்றேன். முள்ளிவாய்க்கால் பகுதியில் வெள்ள அனர்த்தம் நிகழ்ந்திருந்தது. அதற்கான நிவாரணப் பொருட்களுடன் பாடசாலை நண்பர்களுடன் போனேன். நிவாரணப் பொருட்களைக் கொடுத்த பின்னர், முள்ளி வாய்க்கால் பகுதியைச் சுற்றிப் பார்த்தோம். இது வரை கதைகளாகவே நினைவில் கிடந்த நிலம் கண் முன் விரிந்ததிருந்தது. இன்னமும் உக்காத உடைகளும் கைவிடப்பட்ட பொருட்களும் மணலெல்லாம் பரந்து கிடந்தது. இறந்தவர்களின் நினைவுகள் போல்.
சுற்றி முடித்த போது பின்னேரச் சூரியன் மேற்கில் சரிந்து கொண்டிருந்தது, கடலிலிருந்து கரைக்குத் திரும்பிய போது, இடிந்து கிடந்த முள்ளிவாய்க்கால் சந்தைக்கட்டடத்தைப் பார்த்தேன். செல்கள் துளைத்துக் கிடந்தது, புதர் மண்டி. அன்று எழுதிய கவிதை தான் இது.
பதறித் தவித்து குழந்தையைக் காப்பாற்றும் கதை கிருஷ்ணனின் குழந்தைக் காலத்திலும் உள்ளது. கம்சனிடம் இருந்து தப்பிக்க கிருஷ்ணனின் அப்பா அவனை தலையில் தூக்கி, ஆதிசேடன் மழையில் நனையாமல் குடையாக நடந்து யமுனை ஆற்றைக் கடந்து செல்வதாக ஒரு புராணக் கதை உண்டு. இந்த மக்கள் உலோகக் குண்டுகளின் மழையில் தங்கள் குழந்தைகளுடன் எந்தக் குடையுமின்றி இரத்தமூறிய, பிணங்கள் மிதந்த நந்திக்கடலைக் கடந்தார்கள்.