பனித்திணைப் பாணன்

ஒரு நிலம் மனதிலூன்றியவர்கள் நிலம்கடக்கும் போது பெயர்ந்த இன்னொரு நிலம் மொழியில் முளைக்கும். தமிழின் ஆறாம் திணையாய் பனியும் பனிசார்ந்த நிலங்களும் புலப்பெயர்வின் பின் விரிவாக மொழிக்குள் ஊன்றப்படுகிறது. புகைக்கூண்டுக்குள் தணற்கட்டைகளென அகநிலம் உள்ளெரிய பனிக்காலங்களை அச்சூட்டில் கடந்த முதற்தலைமுறையினரின் குரல்களில் கி.பி. அரவிந்தன் முதன்மையானவர். கணப்பின் சூட்டில் வாழும் கவிதைகள் கி.பி. அரவிந்தனுடையது. அதன் அகவுலகு நீறு பூத்து பின்னர் தழன்று கொண்டேயிருப்பது. நிலத்துடன் மரபின் பண் பிணைக்கப்பட்டிருக்கிறது. …

முதுமரபின் பெரும்பாணன்

மரபும் நவீனமும் சேரும் கழிமுகத்தின் நீர்ச்சுழியில் பண்ணெடுத்து மீட்டிய முதுமரபின் பெரும்பாணன் சு. வில்வரத்தினம். தமிழின் பழஞ்சுரங்கத்திலிருந்து மொழி ஆபரணங்களை நவீன வாழ்வின் ஆன்மீகமென அணிவித்தவர். மரபான ஆன்மீகமும் அதிலிருந்து உதிரும் உள்வெளி மீதான கவனமும் மு. தளையசிங்கத்தின் மாணவனாகிய சு. வில்வரத்தினத்துக்குள் சுடர்கிறது. நவீன தமிழின் ஆன்மீகமான கவிதையுலகில் சு. வில்வரத்தினம் கவிதைகள் மகத்தான முன்னசைவுகளை உண்டாக்கியவை. குறியீடுகளாலும் படிமங்களாலாலுமாகிய ஆன்மீக நிலவெளி சு.வியினுடையது. ஈழநிலத்தின் புறக்காட்சிகளும் அகத்தீவிரங்களும் …

வியப்புத் துடிக்கும் குழந்தையின் விரல்கள்

சுயம் பற்றிய ஆதாரமான கேள்விகள் தத்துவம் ஆன்மீகம் கலை இம்மூன்று தளங்களிலும் எழும் ஆதாரமான வடிவம் கவிதை. நான் யார்? எதன் பொருட்டு இந்த வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது போன்ற பல கேள்விகள் கவிதை வரிகளுக்கு நிகரானவை. எல்லா அறிவுத் தளங்களிலும் வேறு வேறு பொருள் கொள்ளப்படுபவை. சுந்தர ராமசாமி எழுதிய கவிதைகள் அவரது புனைவுலகின் மையக் கேள்விகளின் அடிப்படைகளைக் கொண்டவை. அவை தன் நிழல் எங்கிருந்து உருவாகிறது என்ற தற்போதத்தை …

தாயும் தோழியும்

ஈழவிடுதலைப் போராட்டம் உருவாக்கியளித்த நியாயங்களினதும் அற மீறல்களினதும் குரல்களில் ஒளவை முக்கியமானவர். வரலாற்றின் இடர்காலங்களில் மனித மாண்பினை நினைவுறுத்தும் குரல்கள் கவிதையில் எழுவதுண்டு. அவை எதிர்கொள்ளும் வரலாற்றுத் தருணங்களை தன் அனுபவத்திலிருந்து மொத்த மக்கள் திரளின் கூட்டு எதிர்காலம் குறித்த பார்வையாக விரித்தெடுக்கக் கூடியவை. ஒளவை அத்தகைய குரலாக ஈழத்தில் எழுந்தவர். தன்னை மின்மினியெனக் கண்டெடுக்கும் பெண் தன்னிலையும் போருக்குச் செல்லும் போராளியின் தன்னிலையும் ஒருங்கு திரளும் இணைவு ஒளவையில் …

எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும் கடல்

மொழிக்குள் ஒவ்வொரு நிலக்காட்சியும் அந்நிலத்தின் மாந்தர்களும் எழுதப்படும் பொழுது அது மானுட விரிவின் எல்லைகளை விரிக்கும் செயல். கடல் ஒரு நிலமும் கூட. அதன் வாழிடத்திற்குள் மனமூறிய மனிதர்கள் கடலுள் வாழ்ப்பவர்களே. கடலே அவர்களின் மனநிலம். ச. துரையின் கவிதைகள் கடலின் மனிதர்களை வாழ்வாக்கி அளிப்பவை. அவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அலையடிக்கும் பெருங்கடலின் வற்றாத சிறகடிப்பை எழுதுபவை. துரையின் கவிதைகள் கடலிடம் எப்பொழுதும் முடிவுறாமல் கரையை நாநீட்டித் தொடும் வேட்கையைப் …

நனைந்து கொண்டிருக்கும் மழை

தமிழிற்குள் எழுந்த பெண் தன்னிலைகளில் அபூர்வமான உலகத்தைத் தனக்கென நெய்துகொண்டவர் ஃபஹீமா ஜஹான். அவரது கவியுலகிற்குள் சிறுமிகளும் கோழிக்குஞ்சுகளும் ஆட்டுக்குட்டிகளும் இயற்கையும் பல்வேறு வரிகளினூடாகத் துலங்கி வந்தன. பெண் தன்னிலைகளின் கசப்பும் துவர்ப்பும் ஃபஹீமாவில் வெளிப்பட்டாலும் அவரது வாழ்வை அணுகும் பார்வைக்குள் ஊடிழையும் பரிவும் கரிசனமும் மானுடப் பெருக்கின் மையவிசைகளுடன் இணைவு கொள்வது. ஃபஹீமா ஜஹானின் கவியுலகில் ஒரு வித நனைந்து கொண்டிருக்கும் மழையின் இயல்பு இருக்கிறது. தான் எதுவோ …

மகா சாவதானம்

மொழியின் ஒரு முனையை நுணுகி நுணுகி, அதனை மேலுமொரு சிற்றளவு கூட்டும் பணியனெக் கவிதையைக் கருதுவதுண்டு. ஒன்றே துருவித் துருவித் தொடை குடையும் வண்டென கவிஞர்களுள் நுழைவதுண்டு. அசைய முடியாமல் மடியில் படுத்திருக்கும் கவிதைக்குத் தெரியாமல் அவ்வண்டு அக்கவிஞரின் குருதியைப் பீறிட வைக்கும். நகுலனில் துளைத்த நான் எனும் வண்டு அதன் பல்வேறு ரூபங்களில் அவரது கவிதைகளுள் நுழைந்து இன்னொரு புறத்தால் வெளியேறுகின்றன. அந்த இரத்தப் பெருக்கு அக்கவிதைகளுக்குள் மீள …

கள்ளி மலர்ச்செண்டு

பெண் தன்னிலைகள் மொழியின் சுக்கானைப் பிடித்து தங்கள் சொந்தப் புயல்களின் சுழல் விளிம்பிலிருந்து மீண்டெழுவதென எழுந்த 90 களின் பின்னால், உருவான மாலுமிகளில் சல்மாவும் முதன்மையானவர். அவரது கவிதைகள் மொழிப்பெருக்கில் கசப்பெனவும் நிர்வாணமான உண்மைகளினதும் சுழல் விளிம்பில் நீந்திக் கரையேறுபவை. பெண்ணுலகின் பருவங்கள், உளத் துவர்ப்புகள், வேட்கைகள், நிராசைகள், ஆற்றாத கேள்விகள் என்பன சல்மாவின் கவிதைகளை ஊடறுத்து ஒலிப்பவை. அவரது கவிதைகளில் முன்வைக்கப்பட்ட பெண் தன்னிலைகளின் உலகென்பது பெண்ணுடலின் வித்தியாசங்களை, …

அலைமுறியும் கடற்காற்றில்

தமிழ்க் கவிதைகளுக்குள் ஈழத்தின் நிலவுருவையும் பண்பாட்டு மனங்களில் ஒரு பகுதியையும் பிரதிநிதித்துவம் செய்தவை நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள். அவரது கூர்மையான கவிதை வரிகள் மெளனமான மொழிவீதியில் ரயர் ஊரிக்கல்லில் எழுப்பும் சன்னமான ஒற்றை ஒலியைப் போல தனித்துவமானவை. நட்சத்திரனின் கவிமனம் 90 களின் பின்னணியில் உள்ள வாழ்க்கைச் சூழலில் இருந்து எழுந்தது. அக்காலகட்ட ஈழத்து வாழ்வின் துல்லியமான சித்திரங்களில் சிலவற்றை நட்சத்திரன் ஆக்கியளித்துள்ளார். அவரது கவிதைகளின் சங்கீதம் குளத்து நீரின் …

விடுதலையின் மாஇசை

தமிழின் கவியுலகிற்குள் பெண் குரல்கள் தங்கள் நுட்பமானதும் தீவிரமானதுமான வாழ்வை முன்வைக்கக் காரணமானவர்களில் சுகிர்தராணி முதன்மையானவர். சமூக ஒடுக்குமுறைகளின் சுவர்களை இடித்துத் தள்ளி முன்னகரும் கவிப்பெரும் இசை அவருடையது. சுகிர்தராணியின் கவிதைகள் தீண்டப்படாதவற்றின் மேல் கரிசனம் கொள்பவை. தீண்டாமையின் பல்வேறு தருணங்களைத் தீண்டி மொழிக்குள் நிலைக்க வைப்பவை. பளீரென்ற வாள் வீச்சுப் போல் விழும் வரிகள் சமூக மனசாட்சியை அறுத்து அதன் கடலளவு இரத்தம் கால்களின் கீழ் திரள அதன் …