Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

கொடிறோஸ் : குறுநாவல்

Posted on April 19, 2025May 21, 2025 by Kiri santh

அண்ணா வணக்கம்,

நான் மாரி.

தன்னறம் நூல்வெளி அலுவலகத்தில் பிரிண்ட் அவுட் வடிவிலான ஒரு நூல் கொத்து கண்டேன். சிவராஜ் அண்ணனிடம் அது என்னவென்று வினவ அவர் இதை சும்மா படித்துப் பார் என்றார்.

வாங்கி பையிலிட்டுக்கொண்டு வெளியூர் பயணமானேன். சும்மா கொடுத்தால் நான் படிக்க மாட்டேன் நீங்கள் எனக்கு ஒரு டெட் லைன் கொடுங்கள் நான் அதை கணக்கில் வைத்து படித்து சொல்றேன் என்றேன். மூன்று நாட்கள் அவகாசம் கிட்டியது.
நானோ ஐந்து நாட்கள் ஆகியும் அதை முடித்த பாடில்லாமல் இருந்தேன்.

திருப்பூர் புத்தக காட்சியில் கொஞ்சம் இரண்டு நாள் ஓய்வு கிடைக்க அந்த பிரிண்ட் அவுட் நூலை கையில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.
இடைவெளி விட்டு, விட்டு இரண்டு நாளில் படித்து முடித்தேன்….

ப்ப்பா அண்ணா என்ன மாதிரியான ஒரு நூலை நீங்க எழுதி இருக்கீங்க….

இறுதி வரியை முடித்த கையோடு ஒரு தேம்பிய அழுகுரலில் உங்களிடம் நூலை பற்றி மனசில் பட்டதை எல்லாம் சொல்லி தீர்க்க வேண்டும் போல இருந்தது. மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு அமைதியாய் ஒரு பதினைந்து நிமிடம் அமர்ந்தேன்.

அதன் பின்னே சிவராஜ் அண்ணனிடம் உங்கள் எண்ணை கேட்டு பெற்றுக்கொண்டேன். நீங்கள் எழுத்தில் வடித்த ஒவ்வொன்றும் எனக்கு கண் முன்னே காட்சியாய் கிளை விட்டு விரிந்து கிடந்தது .

நீங்கள் படைத்திருப்பது என்னைப் பொறுத்தவரையில் மெய்க் காவியம்….நான் உங்கள் நூலை மெச்சி உங்களுக்கு எழுத என்னவெல்லாமோ யோசனை செய்கிறேன். ஆனால் எதையுமே இறுதி செய்து எழுத அனுப்ப என் மனம் ஒப்பவில்லை….என்றேனும் ஒரு நாள் உங்கள் கைகளை பற்றி, கண்களை மூடி அப்படியே ஒரு நிமிடம் நிற்க வேண்டும். அதன் பின் ஒரு புன்னகையும், சிறு அணைப்பும்.

போதும் அண்ணா….

உங்கள் எண்ணை கொடுத்து பேச சொல்லும் போது ஒன்றை சொன்னார். அவரின் இன்னொரு புத்தகம் வாழ்க்கைக்கு திரும்புதல் நம் அலுவலகத்தில் உள்ளது அதன் முன்னுரையை படித்து விட்டு பேசு என்றார்.

அந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன், கொஞ்சம் வரிகள் சென்ற பிறகு நீங்கள் வான் முட்டும் பாறை ஒன்றை என் மேல் தூக்கி வைத்தாற்போல் அம்மாவின் இறுதி நாட்களுக்குள் என்னை இழுத்து சென்றீர்கள்.

தாள முடியாத நான் அந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நீங்க நல்லாருக்கணும்ங்க ண்ணா….

அன்பும் பிரியமும்….
மாரி

*

வணக்கம் மாரி,

உங்களுடைய கடிதம் கொடி றோசுக்கு வருகின்ற முதலாவது வாசக அனுபவம். இக்குறுநாவலுக்கு உங்களுடைய மனதாழத்திலிருந்து நீங்கள் சொல்லியிருக்கும் சொற்கள் நம்பிக்கையை அளிக்கின்றது.

இலக்கியத்தை ஆக்குவதன் உவகை இரண்டு அம்சங்களில் தங்கியிருப்பதை அறிவேன். ஒன்று, அதை ஆக்குதல். மற்றையது அது வாசகர்களால் உணரப்படுதலின் கணங்கள். ஓர் எழுத்தாளராக முதலாவது உவகையை நான் எப்போதும் அறிவதுண்டு. ஆனால் உங்களைப் போன்ற களங்கமின்மையுடன் இலக்கிய வாசிப்புக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து வாசிப்பவர்கள் தமக்கு நேரும் அனுபவங்களை அறிதலை உங்களின் கடிதம் எனக்கு மீண்டும் மனதிற்கு நெருக்கமாகக் காட்டியிருக்கிறது. அதற்கு நன்றிகள்.

உங்களுடைய தனித்த வாழ்வின் எந்தக் கணங்களை இக்குறுநாவல் தொட்டு எடுத்தது என்பதை அறியேன். ஆனால் எல்லாவற்றுக்கும் அடியில் ஓடும் ஓர் ஆழ்நதியைப் போல அன்னையரும் தந்தையரும் நம்முள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் பொருட்டு நாம் அணைத்துக் கொள்ளலாம். விம்மி ஒரு கணம் வியக்கலாம். புன்னகையுடன் பார்த்துக் கொண்டே நிறைய உரையாடலாம். தொடர்ந்து உங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் எழுதி அனுப்புங்கள். எனது இணையத்தளத்தில் தொடர்ச்சியாக நவீன இலக்கியம், பண்பாடு, கலை சார்ந்து பகிர்வுகளைச் செய்வேன். தொடர் உரையாடலை அதில் நாம் அந்தரங்கமாகவும் உரையாடல் வெளியாகவும் நிகழ்த்திக் கொள்ளலாம்.

கொடிறோஸ் தமிழகத்திலும், இலங்கையிலும் வைகாசி மாத நடுப்பகுதியில் கிடைக்கும்.

ஆக்காட்டி குறிப்பு

வாசித்தவர்கள் : 601

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,169)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,000)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,907)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme