கொடிறோஸ் – கடிதம்

தங்கள் கொடிறோஸ் குறு நாவல் வாசித்தேன். கைக்கு அடக்கமாக, அட்டை வடிவமைப்பு கூட அதன் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அட்டையை திருப்பியதும் அந்த மேற்கோள் “எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும் ஒரே மாதிரியானவை. ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பமும் அதனதன் வழியில் தனித்த துக்கமுள்ளவை” எவ்வளவு யதார்த்தம். அதனைப் பார்த்ததுமே உடனடியாக வாசிக்கும் ஆர்வம் என்னையறியாமல் தோன்றியது. நேற்று ஒரு மணித்தியாலமும் இன்று முப்பது நிமிடங்களும் கொடி றோஸ் என்னுள் மலர செலவாகியது.

சுகந்தன் போல பலர் இங்கு பல இழப்புக்களை தம்முள் புதைத்து வாழ்கிறார்கள். வாய் விட்டு அலறவும் தெம்பில்லை, இலகுவில் கடந்து வாழவும் வழியில்லை. ஆனால் வாழத்தானே வேண்டும். இனிய நினைவுகளையும் கசப்பான அனுபவங்களையும் சுமந்தபடி…. தன் ஆசைகளை தன்னுள் அடக்கி வாழ்ந்து முடிக்கும் அம்மா highlight…அவரிற்கு ஆதரவாக இறுதி வரை இருந்த கணவர் சுப்பர்….வாழ்க உங்கள் எழுத்தாற்றல்! மேலும் பல படைப்புக்களை ஆக்க கடவுள் துணை என்றும் உங்களுடன் இருப்பதாக!

சாந்தி

*

வணக்கம்,

உங்கள் வாசிப்பிற்கும் கருத்துகளை எழுதி அனுப்பியமைக்கும் நன்றி. எங்கள் காலத்தில் குடும்பம் என்ற அமைப்பின் அர்த்தங்கள் விரைவாக மாறி வருகின்றன. கொடிறோஸ் எளிமையான குடும்பக் கதை ஒன்றை வரலாற்றின் மேல் வைத்து சில அங்குலங்கள் அங்கும் இங்கும் மீட்டிப் பார்ப்பதைப் போன்ற அனுபவத்தை எழுதும் பொழுது எனக்குத் தந்தது. பல வகையான குடும்பங்கள் உண்டு. ஒவ்வொன்றின் கதையும் தனித்த வழியிலான துக்கமொன்றிலிருந்து வாழ்க்கையை நோக்கிய தன் சொந்த அறிதலை நோக்கிச் செல்கின்றது. பூக்கற்களால் நுழையும் சிறு கீற்று வெளிச்சங்கள் சுவரில் விழுந்து ஒளியாகி அறையை நிரப்புவதைப் போல.

கிரிசாந்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *