Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

கொடிறோஸ் – குறிப்பு

Posted on May 28, 2025May 28, 2025 by Kiri santh

ஈழத்திலிருந்தும் புலத்திலிருந்தும் வெளிவரும் பிரதிகளின் பொருண்மை மீதான இலக்கிய மடங்களின் குற்றம் கடிதலாக இருப்பது அவற்றின் “போர்க்காலம் மீதான காதல்”. சுமார் முப்பது வருடங்களை போருக்குள் தொலைத்த சமூகத்துள்ளிருந்து வரும் பிரதிகளின் இயல்பூக்கமாக “எதிர்கொள்ளும் யதார்த்த இயங்கியலை எழுதுதல் ” அமைந்திருந்தமை, குற்றம் கடிதலுக்கான எதிர்வினை.

எழுத்து ஒரு இயக்கமாக தொடர்கின்றபோது, கடத்தலும் அதன் இயல்பாக கைகூடுகின்றது. அந்தவகையில் ஈழ எழுத்தாளர்களின் பிரதிகளில் “போரினை கடத்தல்” என்பதும் காலத்தோடு முகிழ்வதை அவதானிக்க முடிகின்றது.

அண்மையில் வெளிவந்த கவிஞர் தில்லை அவர்களின் “தாயைத்தின்னி “ நாவலும், கவிஞர் “கிரிசாந் அவர்களின் “கொடிறோஸ்” குறுநாவலும், புதிய அலைகளின் பிரவாக ஊற்றுக்களுக்கான சமிக்கைகளாகவும் கொள்ள முடியும் அல்லது இனி “தக்கன பிழைத்தல்” என்றவாறும் கூறலாம்.

நாவல் வாழ்வின் முழுமையினை பேசி செல்லும் கலை என கருதினால் குறுநாவல் முழுமையின் ஒரு கூறு என்று துணியலாம்.அவ்வளவிலேயே “கொடிறோஸ்” இன் வடிவம் குறித்த வினைகளுக்கு என்னளவில் முற்றுப்புள்ளி இடப்படுகின்றது.
தன்கதை கூறுதல் என்ற செயலூக்கமும், நினைவிடை தோய்தல் என்ற சால்பும் இந்த குறுநாவலின் கலையாக்கத்தின் பின்புலமாகிறது.

“திக்கற்ற அலைச்சலில் இருந்து திரும்பும் மனித சமூகம் வேர்கொண்டு வாழத் தொடங்கியதற்கு பின் திரும்பவும் பொருளுள்ள அலைதலே வாழ்வாகும்”

( கருத்தியல் தலைமையும் அறமும்-கிரிசாந் / புதிய சொல்-10)

சமூகமாக அல்லது சற்றே பெரிய குடும்பமாக அலைச்சலில் இருந்த மனிதன், சிறிய தனி அலகாக சுருங்கிய பின்னர் அலைச்சல் நின்றதா என்றால், விடை இல்லை. அலைச்சல் காலத்தில் பெரும் பொருள் உணவாயே இருந்தது. மனித குல வரலாறு கூறும் இருந்தது. ஆனால் அலைதலுக்குள்ளாகிய குடும்ப அமைப்பில் பொருட்கள் பன்மைத்துவமாகி பெருகின. அதனாலேயே பொருளுள்ள அலை தலே வாழ்வாகியது.

இரண்டாயிரத்துக்கு பின்னதாகிய காலத்தில், ஈழப்போரின் இறுதி காலத்தில் யாழ். மத்திய தர குடும்பமொன்றின் “பொருளுள் அலைதலே” கொடிறோஸ். ஒற்றை தாவரத்தில் மூன்று நிற பூக்களை ஒட்டி விடுதலினால் கொடிறோஸ் உதயமாகிறது. இது உருவத்தில் விஞ்ஞானமும் உள்ளடக்கத்தில் படிமமும் கலந்த கூட்டுரு.

இந்த கூட்டுருவின் நிலைத்தலும் பின் உழலுமே நாவலின் திசை. கதை நகரும் நான்காண்டுகள் இந்த குடும்பத்தின் மொத்தத்தையும் மடை மாற்றிய காலம். இந்த நாவலில் அந்த காலத்தின் அரசியல் அவ்வளவு தொடர்புறுத்தப் படவில்லையாயினும் முற்றிலும் தவிர்க்கப்படவுமில்லை.நுணுக்கமாக பார்ப்பின், இந்த நான்காண்டுகளேஈழத்தமிழர்களின் மொத்த கனவுகளும் சிதைந்த ஆண்டுகள்.கொடிறோஸ் நாட்டிலும் வீட்டிலும் பட்டுப்போனமையே முடிவாகிறது.

(லலிதகோபன்)

இந்த நாவல் கையில் கிடைத்த நேரம், தொட்டு கூட பார்க்க முடியாதபடிக்கு எனது படிப்பும் பரீட்சைகளுமாகிய காலம். பரீட்சை முடிந்ததும் ஒரு கொண்டாடும் மனநிலையை மனது தேடியது. ஆனால் பரீட்சை முடிந்தும் ஒரு வெறுமையான மனநிலையே தொடர்ந்தது. பேருந்து பயணம், படிப்பு, பரீட்சை மற்றும் நண்பர்கள் என்ற வட்டம் திடீரென ஒரு முடிவுக்கு வந்ததை இயல்பாக நோக்காது அதனுள்ளேயே மனது சிக்கி கிடந்தது. அப்படியொரு சூன்ய மனநிலையில் தொடங்கிய இந்த வாசிப்பு, அதன் முடிவிலும் எவ்வித மீள்தலையும் அளிக்கவில்லை.

நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலக்கை தேரின் அல்மருகலின்
உலகப்பொய் வாழ்க்கையை ஓம்பற்க!

-பட்டினத்தார்-

லலிதகோபன்

வாசித்தவர்கள் : 381

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,170)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,005)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,908)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme