11: உருகம் எழல்

11: உருகம் எழல்

பாணர் குழுவொன்று புயலில் வீழ்ந்து கிடக்கும் மரமொன்றை மான் கூட்டமொன்று தாவிக் குதித்துச் செல்வது போல் வாகை சூடனைத் தாவிச் சென்றது. கால்களின் சத்தங்கள் குளம்பொலிகளென தன்னுள் எதிரொலிக்க மயக்கிலிருந்து கண்விழித்தான். நிலவு சரிந்து தாழ்ந்து போய்க் கொண்டிருந்தது. விழிகள் திறந்து கொண்டதுமே சுற்றி அலைந்த யாழிசையின் கூவல்களும் விறலியரின் தீங்குரல் பாடல்களும் பாணர்களின் உளறல்களும் அவனைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின. மதுச் சாலைக்கு முன்னிருந்த நெருப்பினருகில் போர்வீரர்கள் குழுவொன்று பழைய போர் வெற்றிப் பாடல்களைக் கைகளைத் தட்டியும் கால்களை உதைத்துக் கொண்டும் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தனர். வாகை சூடன் வழிந்து கண் மறைக்கும் இமைகளை முடமான கைமொழியால் கசக்கிக் கொண்டு சற்று உயிர் பெற்றான். குழுவினருகில் சோதியன் நிற்பதைப் பார்த்தவன் “டேய் சோதியா. சோதியா. இங்கே நான் தான். இங்கே வாடா. கால்கள் வலிக்கின்றன” என கரகரவென்றிருந்த குரலால் கூவியழைத்தான்.

சோதியன் கைகளைத் தூக்கி வருவதாகக் கையசைத்தான். புலிக்குட்டியொன்று நடந்து வருவது போல் இடப் பக்கம் சற்றுச் சாய்ந்து வலப்பக்கத்தை தூக்கிக் கொண்டு சோதியன் நடந்து வந்தான். “சோதியா என்னை உள்ளே அழைத்துச் செல். எனக்கு மது வேண்டும். மதுவின்றி நாக்கு வரண்டிருக்கிறது. என்னால் நடக்க முடியவில்லை. என்னைக் கைத்தாங்கலாக அழைத்துச் செல்” எனக் கட்டளையின் குரலில் சொன்னான். வாகை சூடன் தளபதியாக இருந்த படைப்பிரிவில் சோதியன் இணைந்த பொழுதில் அவனுக்கு ஆயுதங்களைத் தூக்கவே பலமில்லையென்று அவனை ஆவணப் பணிகளுக்கு அமர்த்தியது வாகை சூடன் தான். இறுதியாக நடந்த போரில் வாகை சூடனின் கை முழங்கையுடன் வெட்டுண்டது.

சோதியன் அவனைத் தூக்கி சரிந்து விழுவதைப் போல் கூட்டிச் சென்றான். “என்னடா சோதியா. இப்பொழுதும் நீ சாப்பிடுவதில்லையா. கைகள் முருங்கைக்காய் போலக் கிடக்கிறது. நல்ல ஊன்சோறு உண்டு வாலிபன் போல் இருக்க வேண்டாமா. என்னைப் பார். இப்போதும் ஒரு வேழத்தை இந்த ஒரே கையாலேயே வீழ்த்துவேன்” எனக் கைகளை வாள் போல் வீசினான். அங்கிருந்த உட் திண்ணையின் தூணுடன் அவனைச் சாய்த்து அமர்த்தியபின் இரு மூங்கில் குவளைகளில் மதுவை நிரப்பியபடி வந்தான். வாகை சூடன் ஒரே மடக்கில் ஒன்றைக் குடித்து முடித்து ஏப்பம் விட்டுக் கொண்டு மற்றைய குவளையை வாங்கிக் கொண்டான். சோதியன் இன்னும் இரு குவளைகளில் மதுவை வாங்கி வந்து அருகில் வைத்தான். அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு “உனது அன்பே தனி தான் சோதியா” என உடல் குலுங்கச் சிரித்தான். கண்களில் நீருடன் பீழையும் தெறித்தது.

அரூபி யாழை முன்நீட்டி “என் குடி மூத்தோருக்கும் இளையோருக்கும் வணக்கம்” எனத் தலை வணங்கிவிட்டுக் கைகளைத் தந்தியில் தொட்டாள். ஒரு கீதம் துள்ளி எழுந்து மறைந்தது. சோதியன் தனது விழிகளைத் தந்தி நாண்களில் ஓடவிட்டான். “மதுச் சாலையில் வீற்றிருக்கும் மகாவீரர்களே, முது பாணர்களே, குடிகளே, கேளுங்கள்.
நம் தேசத்தின் விடிவை எழுதிய உருகத்தின் கதையைப் பாடுகிறேன் கேளுங்கள். நம் தேசத்தின் முதற் கனவை யாழில் ஏற்றுகிறேன் செவி கூருங்கள். உருகத்தினால் உண்டானது நம் தேசம். உருகத்தினால் பாதுகாக்கப்படுவது அதன் குடிகள். உருகத்தினால் வழிநடப்பது அதன் நெறி” என உருகம் தோன்றிய கதையைப் பாடத் தொடங்கினாள் அரூபி.

“சிங்கை நகர் நாடு பிடிக்கும் வெறியிலும் தமிழ்க் குடிகள் மேற் கொண்ட பூசல்களினாலும் எல்லைகளில் அடிக்கடி வந்து தாக்கி விட்டுச் செல்வது வழமையாக நடந்து வந்தது. அரசனும் அவ்வப்போது தமிழ்க்குடிப் படைகளைப் போய்ச் சந்திப்பதும் அவர்களை நிமிர்ந்து பார்க்காமலேயே சொல்லாடிவிட்டுச் செல்வதையும் தனது வழக்கமாகக் கொண்டிருந்தான். வீரர்கள் சலிப்படைந்து களங்களையும் எல்லைகளையும் விட்டு நீங்கத் தொடங்கியிருந்தனர்.

நீலழகன் முதுகொல்லர் சீர்த்தரிடம் எத்தகைய போரிலும் வீழாத வாள் ஒன்றைச் செய்யும் படி கோரினான்.
“தாத்தா, இந்தப் போர் முடியப்போவதில்லை. சிங்கை நகர் ஒருபோதும் தனது வாயை நம் கழுத்திலிருந்து எடுக்கப் போவதில்லை. அது தாய்ச் சிம்மத்தின் வாயல்ல. நாம் அதன் வேட்டையில் அகப்பட்ட இரை. ஒவ்வொரு நாளும் அலைகரையில் கேட்கும் சேதிகள் கலக்கமாய் என்னில் வளர்கின்றன. இரவுகளில் உறக்கம் விழிகளைத் தொடுவதில்லை. கால்கள் நிற்காமல் நடந்து கொண்டேயிருக்கின்றன. அலைகள் நிற்காமல் அளைந்து கொண்டிருக்கும் கரையைப் போல மனமும் மண்ணையே நாடுகிறது. இந்த மண்ணில் சிந்தும் ஒவ்வொரு துளி குருதிக்கும் கேட்கும் ஒவ்வொரு ஓலத்திற்கும் சிங்கை நகரை எரித்தாலும் என் சினம் ஆறாது. ஒவ்வொரு மரணமும் என்னில் ஒரு அங்கமென இழக்கப்படுகிறது. இங்கிருக்கும் ஒவ்வொருவரின் விழிகளாலும் நான் அழுதுகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. தாத்தா, எனது விழிகளுக்கு ஒரு கனவு அளிக்கப்பட்டுள்ளது. அது யாரால் எப்படி அளிக்கப்பட்டதென அறியேன். ஆனால் நான் அதை நிகழ்த்தவே மண் வந்துள்ளேன்” நெடுநாள் உறக்கமின்றிக் கூண்டிலடைக்கப்பட்ட சினம் கொண்ட புலியின் விழிகளுடன் தன் மெல்லிய குரலில் தளர்வற்று உறுதியாக அவன் சொன்ன சொற்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சீர்த்தர் “போய் வருக மகனே. என் ஆயுளை அளித்து உன் வாளை நான் ஆக்குகிறேன்” எனச் சொல்லி அவனை வாழ்த்தியனுப்பினார்.

எதிர்பாராத வகையில் பட்டினத்தின் மையத்திலிருந்த நாகதேவி கோவிலுக்கு அருகில் வந்த சிங்கைப் படையினர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளையும் மனைகளில் அமுதாக்கிக் கொண்டிருந்த பெண்டிரையும் திண்ணைகளில் கதை பேசிக் கொண்டிருந்த முது பெண்களுமென நூற்றுக்கணக்கான பெண்களைத் திரண்டு வந்து சிறைப்பிடித்து கோவிலுக்குள் அடைத்தனர். தமிழ்க்குடியின் காவற் படைகள் வனத்தில் திரட்டப்பட்டு தளபதிகளும் அரசனும் அங்கே சென்றிருப்பதை ஒற்றறிந்த சிங்கை வீரர்கள் பட்டினம் புகுந்தனர். எதிர்ப்பட்ட குடிகளை வெட்டி வீழ்த்தினர். மனைகளைக் கொழுத்திய போது நெருப்பு எரிந்து எரிந்து ஒவ்வொரு பனையோலைக் கூரைகளிலும் ராட்சதக் கால்களால் ஏறி மிதித்துத் துள்ளி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குப் பாய்ந்தது. அன்னையர்களின் முன்னே குழந்தைகளை யானைகளின் பெருங்கால்களில் போட்டு பலிக்கழிப்புப் பழங்களென மிதித்துப் பிதுக்கினர். வெட்டிய சிறுவர்களின் தலைகளைக் கால்களால் எத்தி உதைத்து விளையாடினர். நடுவீதியில் முது பெண்டிரை நிர்வாணமாக நிற்க வைத்துத் திருக்கை வாலினால் பின்னப்பட்ட சாட்டையால் அடித்தனர். உடலில் ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப ஒரேவரியாக அடிப்பது யார் எனப் போட்டியிட்டனர். முதுகுகளில் அடித்துக் களைத்த படையினர் கால்களைத் திண்ணைகளில் ஊன்ற வைத்துத் தொடைகளில் அடித்தபடி அவர்களின் அலறலைக் கேட்டு வெறிக்கூச்சல் எழுப்பினர். முதுபெண்டிர் உடல் சுருளச் சுருள அலர்ந்து விழுந்தனர். முலைகளிலிருந்து குருதி கருஞ்சிவப்புக் கட்டிகளெனக் கசிந்து கட்டியிருந்த முதுமாது ஒருத்தியை அவளின் நரைக்கூந்தலில் பற்றி “முதலில் இவளைப் புணர்ந்து பழகுங்கள். பிறகு இளம் பெண்களைப் புணரலாம்” என இடியின் தடித்த குரலில் கூவினான் படைத் தளபதி தேம்பவாவி. படையினர் சிரித்துக் கொண்டு நெருங்கி வர கைகளைக் காட்டி அவர்களை நிறுத்தச் சொன்ன இளம் தளபதி மலகந்தகம “தளபதியாரே, எங்களது வாள்களை இந்தப் பொந்திலா போட்டு வைப்பது. இத்தனை காதம் எங்களைச் சுமந்து வந்த கிழக் குதிரைகளுக்கு இவள்களைக் கொடுக்கலாம்” எனத் குடிகளின் குருதி தெறித்து ஈரமாகிய தன் குழலை ஒருகையால் படியவிட்டு முகத்தின் குருதியை மழித்துக் கொண்டு இரு கரங்களையும் இடுப்பில் ஊன்றியபடி சொன்னான். அங்கிருந்தவர்கள் சிரித்தபடி மயங்கியிருந்த முது பெண்டிரின் மேல் நீரை அடித்து எழுப்பி அவர்களை ஆடையின்றி வரிசையாக அழைத்துச் சென்று குதிரைகளின் முன் நிறுத்தினர். முதுபெண்டிர் காட்டில் பற்றிய தீயென ஒருவர் இன்னொருவரின் உடலில் உரசிப் பற்றியபடி மண்ணில் விழுந்து புரண்டனர். குதிரைகள் கலவரமுற்று அவர்களை மிதிக்கத் தொடங்கின. மார்பிலும் தலையிலும் தொடையிலும் வயிற்றிலும் புரண்டு புரண்டு உருள உருள குதிரைகள் அரண்டு மிதித்து உதைத்தன.

இளம் படையினன் ஒருவன் அங்கிருந்த பெண்கள் ஐவரின் கூந்தலை வாளால் அறுத்து அவர்களை அக் கூந்தலாலேயே கட்டி தன் குதிரைகளுடன் பிணைத்து அதை அடித்து விரட்டினான். வீதியின் கற்தரைகளில் அங்கம் இழுபட அவர்கள் கதறிய ஒலியைக் கேட்க முடியாத சிங்கை நகரின் முதுவீரர் அபய பண்டு தன் விழிகளில் உகுந்த கண்ணீரை அடக்கியபடி நீர்த்திரைக் கண்களால் அக்கணங்களைப் பார்த்து உடலதிர நின்றிருந்தார். கொன்றவர்கள் போக எஞ்சிய கிழவர்களையும் வாலிபர்களையும் பட்டினத்தை விட்டு ஓடச் சொல்லி விரட்டினர் படையினர். குடிகள் வனம் நோக்கி ஓடத் தொடங்கினர்.

சிறைபிடிக்கப்பட்ட பெண்களை நாகதேவி கோவிலின் திசையெல்லாம் குவித்து வைத்து அடித்து அச்சுறுத்தினர் சிங்கையின் படையினர். நாகதேவி சிலையின் மீது ஆண்குறிகளைத் தூக்கி வட்டமிட்டுச் சலம் கழித்தனர். “உங்கள் அன்னைக்கு சலநீராட்டு” எனக் கெக்கலித்தனர். முதுபெண்டிரினதும் இளம் தாய்மாரினதும் வாய்களைத் திறக்கச் சொல்லி படையினரைச் சலம் கழிக்கச் சொன்னான் சிங்கைத் தளபதி தேம்பவாவி. படையினர் சிரித்துக் கொண்டே சிறுமிகளையும் இளம் பெண்களையும் குழுவாக நிற்க வைத்து விட்டு முதிர் பெண்களை முழங்காலிடச் சொல்லிச் சத்தமிட்டனர். அழுகையும் மிதிபடும் ஒலிகளும் கேட்டுச் சிறுமிகள் விக்கி விக்கி அழுது உடல் நடுங்கிக் கொண்டிருந்தனர். முழந்தாளில் முதிர் பெண்கள் நிற்க மறுத்துத் திமிறினார்கள். குழந்தை முகம் கலைந்து இன்னமும் சிறுமி கூட ஆகாத ஒரு சிறு பெண்ணை இழுத்து வந்து அவளின் தலையை வெட்டி அவளின் குருதியைப் பெண்கள் மீது தெளித்தான் மலகந்தம. குருதி ஒட்டிய ஆடைகளுடன் முகம் கண்ணீரென வழிந்து ஊற்றி மார்புகளில் புரண்டோட கால்கள் கூசிக்கொள்ள
கால் மடிந்தனர் முதுபெண்டிர். அவர்களின் முன் அனைத்து ஆடைகளையும் உரிந்து வாளும் கையுமாக அலைந்தனர் சிங்கையின் படையினர். முது பெண்டிரின் வாய்க்குள் சலம் கழித்தனர். சலம் வராதவர்கள் தங்கள் ஆண்குறிகளை வாய்க்குள் திணித்துக்கொண்டு உறியச் சொல்லினர். கேவி அழும் வாய்களில் உமிழ் நீர் வழிந்தோடக் கூந்தல்கள் கலைந்து படையினரின் கரங்களுக்குள் கிடந்து துடித்த தங்கள் தாய்மாரைப் பார்த்து இளம் பெண்கள் அழுது வயிறு நொந்து மூச்சு முட்டினர்.

தேம்பவாவி ஒரு சிறுமியைப் பிடித்து அவளின் வளரா இளமுலையில் காம்பைக் கிள்ளிச் சுண்டியிழுத்தான். அவள் கன்று கேவுவதைப் போல வலியில் “அய்யோ அம்மா” எனக் கத்தினாள். “அய்யோ அம்மே” எனச் சொல்லி உதட்டைச் சுழித்து இதில் “யார் உன் அம்மா” எனக் கேட்டான் தேம்பவாவி. அவள் அழுது கொண்டே தாயை விரல் நீட்டிக் காட்டினாள். அவளது தாயைக் கூட்டி வந்து மகளின் முன்னால் தாயை நிற்க வைத்து மீண்டும் சிறுமியின் மறு முலையை குருதி கண்டுமளவுக்குக் கிள்ளினான். அவள் அலறிய சத்தத்தில் கோவில் சுவர்கள் பெருமின்னல் வீழ்ந்த விருட்சமென விறைத்து விதிர்விதிர்த்தன. சிங்கை நகரின் படையினர் சுற்றி நின்று தேம்பவாவியை உற்சாகப்படுத்தி வேட்டை நாய்களின் குரலில் ஊளையிட்டனர். கோவிலின் மணிகளை ஆட்டி ஆட்டி அதனோடு குழையும் அழுகையின் சத்தத்தை ரசித்து மகிழ்ந்தனர்.

சிறுமியின் தாய் தேம்பவாவியின் தடித்த யானை போன்ற கால்களில் விழுந்தாள். வாயிலிருந்து சொல் எழாமல் ஒலிமட்டுமே உமிழ்நீருடன் தெறிக்கக் கெஞ்சினாள். அவளை எழுந்து நிற்கச் சொல்லிக் கை காட்டினான். அவள் எழுந்து நின்று இருகரமும் கூப்பிக் கொண்டு தண்டு உடைந்து தூங்கும் தாமரையென உடல் துவள நின்றாள்.

அவளின் கூந்தலை மலகந்தகம பின்னிருந்து இழுத்து அவளின் ஆடையை நாரை உரிப்பது போல் உரித்தான். பெண்களின் கதறலலொலி நாகம் புகுந்த பட்டியென உடைப்பெடுத்தது. அவளை அவளின் மகள் முன் இருபது வீரர்கள் புணர்ந்தார்கள். அவள் உடலில் சுக்கிலமும் ஆண்குறியும் நிரம்பாத இடமென்று எதுவும் இருக்கவில்லை. அவள் கசக்கி வீசப்பட்டு நிலத்தில் மல்லார்ந்து கிடந்தாள். தாய் கட்டியாய் இறுகி பின் வழிந்த சுக்கிலம் இமையை விட்டு வழிய கண்களை விழித்த போது யானை போன்ற கால்களில் உடைந்த மரக்கிளையென சாய்த்து கரடிக் கைகளுக்குள் வைத்து தளிர் முலையைக் கடித்துக்கொண்டே தேம்பவாவி தனது மகளை வேட்டை நாயெனப் புணர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். சிறு மகளோ வலியிலும் அல்குலிலிருந்து வடிந்த குருதியிலும் மயங்கி மயங்கி அவன் மேல் சரிந்து விழுந்தாள். மகளின் கண்களில் ஒளியிருக்கவில்லை. ஈரமூறிக் கனத்து ஒட்டிய விழிகள் எதையும் பார்க்கக் கூடதென இறுக்கிக் கொண்டு வாய் மட்டு விசும்பிக் கொண்டும் உதறலெடுத்துக் கொண்டுமிருந்தது. தாயின் உடல் அசைவு கொண்டெழுவதற்கு ஒருதுளி உயிருமற்றுக் கிடந்தது. விழியில் மட்டும் எஞ்சியிருந்த ஒரு துளி உயிர் கண்ணில் நீரெனக் கசிந்து துளித்தது.

அன்று நாகதேவியின் உறை விழிகளுக்கு முன் அத்தனை பெண்களும் சதைகளைக் கொத்தியுண்ணும் கழுகின் அலகுகளெனக் கூர்நகங் கொண்ட சிங்கையின் வீரார்களால் மேனி கீறிக் குருதிக் கோடுகள் பெருக நிர்வாணப்படுத்தப்பட்டனர். அத்தனை பேரும் உயிர் இருக்கும் வரை நூறு நூறு குறிகளால் புணரப்பட்டனர். வாள்களால் முலைகள் அறுக்கப்பட்டனர். நாகதேவியின் மடியில் வெட்டப்பட்ட ஐம்பது சிறுமிகளின் முலைகளைப் படையெலனக் குவித்தனர் சிங்கையின் படையினர். அவை இரத்த மலர்களென அன்னையின் மடியில் சுக்கிலச் சேறுடன் வழிந்தன.

முதுகொல்லர் சீர்த்தரின் வாட் பட்டறைக்கு செய்தி வந்த பொழுது உலைக்களமெனக் கொதிக்கும் விழிகளுடன் முழந்தாளில் நின்றபடி நீலழகன் விம்மி விம்மி அழத் தொடங்கினான். சீர்த்தர் நான்கு பருவமாகத் தன் முதுகரங்களால் தொட்டு உலைத்து உருக்கிய உலோகத்திலிருந்து மண்ணில் இதுவரை உருவாக்கிய வாள்களிலேயே உறுதியும் வீச்சும் சமநிலையும் கொண்ட தன் மூதாதையரின் முழுக்கனவையும் ஆகுதியாக்கிய வாளை நடுங்கும் உடலுடன் முழந்தாளில் நின்றபடி நீலழகனிடம் நீட்டினார். வாளில் விழி தொட்டதும் செய்ய வேண்டியது என்னவென்பது நீலழகனின் நெஞ்சில் விரிந்தது. ஒருகணம் தனக்குள் உறைந்து பின் நிகருலகு மீண்டவன் வாளைக் கையில் எடுத்தான்.

பெண்கள் கொல்லப்பட்டு அங்கங்கள் சிதறிக் கிடந்த நாகதேவி கோவிலுக்குப் புரவியில் புறப்பட்டான். பெருவீதியில் எரிந்து கிடக்கும் வாணிபத் தலங்களையும் சத்திரங்களையும் மனைகளையும் நோக்கினான். கொன்று குவிக்கப்பட்ட கிழவர்களின் தலையற்ற உடல்களைத் தாண்டிச் சென்றான். மேனியில் சாட்டைக் கோட்டுக் குருதிக்கட்டிகள் வெய்யிலில் மினுங்க புரவிகளால் மிதிபட்டு இறந்து கிடந்த முதுபெண்டிரை விழிகளில் நிறைத்துக் கொண்டான். நாககோவிலுக்குச் செல்லும் முதல் வழியில் யானைக் கால்களில் மிதிபட்ட குழந்தைத் தலைகள் குருதியும் நிணமும் குழைந்து கிடந்தன. காகங்களும் கழுகுகளும் மண்ணலைந்தன. உடல்களில் கொத்தி உந்தியெழுந்தன. குருதி மொய்க்கும் ஈக்கள் சுழன்றன. நரிகளும் கழுதைப் புலிகளும் காட்டின் கரையைக் கடந்து நகர் நுழைந்து கொண்டிருந்தன. ஒரு குழந்தையின் இடவிழியைக் காக்கையொன்று கொத்திப் பார்த்து விட்டு மீண்டும் கொத்தியது.

நீலழகன் தன் வாளை எடுத்துச் சுழற்றியபடி சினம் அழலெனப் பற்றப் புரவியின் வயிற்றை இருகால்களாலும் உதைந்தான். அப்புரவி தன்னுடலில் ஏறியிருப்பவன் அரக்கனென உணர்ந்தது. அரக்கன். அவன் அரக்கன். அவனுள் எழுந்த ஒவ்வொன்றும் அழலெனத் திரண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு அரக்கனென ஆகியது. அவன் முதுதாதை இராவணன் ஓர் அரக்கன். இக்குடியைக் காக்கும் ஒவ்வொருவனும் அரக்கன். தன் குடிகளை அழிப்பவரின் முன் இரக்கமற்ற அரக்கன். அசுரன். அவன் அசுரன். இக்குடியைக் கொல்பவரின் குருதி குடிப்பதனால் அவன் அசுரன். அவன் நரம்புகளில் குருதி நிலைகொள்ளாது பாய்ந்தது. அவன் உடலில் ஓராயிரம் அரக்கர்கள் பிறந்து முளைப்பதை அவன் அகமறிந்தது.

கோவிலின் முன் புரவி வேகம் கலையாமல் தன்னைத் தானே இழுத்து நிறுத்தியது. நீலழகன் அசுரனெனக் குதித்தான். அரக்கனென நடந்தான். நாகதேவியின் மடியில் சுக்கிலம் வழியக் கிடந்த இளமுலைகளை நோக்கினான். நடுமண்டபத்தின் கல்மேடையில் கால்கள் பரந்து யோனியால் குருதி வடிந்து துணியில் காய்ந்திருக்க கழுகொன்று இறங்கி இறங்கி வட்டமிட்டபடி இருந்த சிறுமியின் உடலம் கண்டான். கால்கள் இழுபட இழுபட வாளை நிலம் நீட்டியபடி நடந்து வந்தான். மேடையைச் சுற்றிலும் இறந்த பெண்களின் உடல்கள் கலைந்து கிடந்தன. உறவினர்கள் அவர்களின் உடல்களைத் துணியால் போர்த்தி மார்கள் அடித்துப் பிய்த்து அழுமொலி கோவிலின் கற்பாறைகளில் எதிரொலித்து செவிகளில் உருக்கென நிறைந்தது. மகளைப் பார்த்தபடியே இறந்து கிடந்த தாயின் அருகில் சென்று முழந்தாளிட்டான். அவள் விழிகள் மகளை நோக்கித் திறந்திருந்தன. அதில் உறைந்த ஒரு துளிக் கண்ணீரொன்று குருதியுடன் குழைந்திருந்தது. அதை நோக்கியபடி நின்றான். அவர்களது உறவினர்கள் இன்னும் வரவில்லை. உடல்களை நேராக அடுக்கினான். மகளின் அருகில் தாயை வளர்த்தினான். கால்களை நேராக்கி அவற்றைத் தொட்டு இறுக்கினான். தாயினதும் மகளினதும் குளிர்ந்த கால்களை ஒன்றருகில் ஒன்றென வைத்தான். தாயின் விழிகளை மூடினான். மூடமறுத்துத் திறந்து கிடந்த அவ்விழிகளின் விளிம்பில் கிடந்த கண்ணீரைத் தொட்டான். அவன் தன் வாளின் ஒளிர்விடும் பிரகாசம் கொண்ட விளிம்பில் அந்தக் கண்ணீர்க் குருதியுடன் சேர்த்துத் தன் விரலை அழுத்தி இரு குருதியையும் பலியெனக் கீறினான். உடல்களின் முன் ஒருகாலில் முழந்தாளிட்டு வாளை ஏந்தியபடி “தாயே, மகளே, உங்களது கண்ணீரிலும் குருதியிலும் இந்த வாள் உதித்தது. உங்களைக் கொன்றவர்களின் அங்கத்தில் உள்ள குருதி முழுதையும் இந்த வாள் குடிக்கும். இது உங்களின் மீது ஆணை. மகளே உன் தாய் உருக்கிய கண்ணீரின் மேல் ஆணை” என்றான் நீலழகன்.

கூந்தல் தணலென எரிய விழிகள் அழலெனப் பொங்க நீலழகனே நேர்வந்தான் என்ற தோற்றமயக்குடன் எழுந்த அரூபியின் சிறுகரத்திலிருந்து யாழ் விலகியது. சொல் முற்றி நின்றாள். மிகுதிச் சொற்கள் ஒரு கண்ணீர்த் துளியென உகுந்தது. சோதியன் இருவிழிகளும் எரிந்து ஊற்ற அதன் கலங்கலின் சிற்றிடை வெளிகளில் கரைந்து கரைந்து தோன்றும் அரூபியை நோக்கி விழிகளால் எழுந்தான்.

மூச்சை ஒரு திருக்கை வால் வீச்சென உள்ளே இழுத்துக் கொண்டவள் “முது பாணர்களே, பெரு வீரர்களே, அந்தக் குருதியின் கண்ணீரில் உகுத்ததே உருகமென்றாயிற்று. அது புகுந்த போர்களில் குருதியன்றி அது எதையும் அறிந்ததில்லை. ஒவ்வொரு முதுபாணரின் உடலிலும் ஒரு தந்தியென உறைவது உருகம். ஒவ்வொரு முதுவீரரின் உடலிலும் வெட்டப்பட்ட அங்கமென நிலைத்திருப்பது உருகம். ஒவ்வொரு குடியினதும் துயிலில் முளைக்கும் பெருங்கனவு உருகம். ஒரு துளி கண்ணீரில் உதித்த சூரியன் உருகம். சூரியன் ஏந்திய சூரியன் உருகம். நம் கரிகாலன் ஏந்திய கண்ணீர் உருகம். அதை வாழ்த்துக! அதைப் பாடுக!” என்றவள் மெய் நீங்கி மண் சரிந்தாள். முதுவிறலியொருத்தி எழுந்து சென்று அரூபியை மடியமர்த்தி விசிறத் தொடங்கினாள்.

சோதியன் அருகிலிருந்த வாகை சூடனைப் பார்த்தான். கைகளைப் பரப்பிக் கொண்டு வாயில் வீணிர் வழிய நெஞ்சைப் பரத்திப் படுத்திருந்தான். மதுச்சாலையில் அணைந்திருந்த ஒலிகள் அரூபி மயங்கியதும் எழுந்து பரவத் தொடங்கியது. பலநூறு முறை அக்கதையைக் கேட்டிருந்த முதியவர்கள் மெல்ல மெல்ல காலத்தின் மறதிக்குள் சென்றுகொண்டிருக்கும் தங்கள் நினைவுகளுக்குள்ளிருந்து வெளியே வந்து மதுக்குவளைகளை வாய்க்குள் கவிழ்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

வாலிப வீரன் இளம் பிறையன் முதுபோர் வீரர் உருத்திர சேனரின் கைகளைப் பற்றியபடி “நீங்கள் அரசருடன் போர்க் களம் கண்டவரல்லவா. உங்கள் கரங்களைத் தொட்டுப் பார்க்கவா. போர்க்களம் பற்றிச் சொல்லுங்கள் சேனரே” எனச் சிறுவனின் வியப்புடன் விழிகள் மலரக் கேட்டான். “அவையெல்லாம் இப்பொழுது செம் புழுதிக்குள் சென்று மறைந்து விட்டன பிறையா. நீ களத்தில் நுழையும் வரை தான் வீரன். பின் களம் தான் உன்னை ஆடும்” என்று சொல்லிவிட்டு நிதானித்து அவன் இளம் விழிகளை நோக்கி “ஆனால் நீலழகன் போரில் நிற்கும் பொழுது அங்கிருக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரது கரங்களும் கால்களும் விழிகளும் ஆகுவதை உணர்ந்திருக்கிறேன். அவர் எளிதிலேயே நம் உடம்பில் ஒரு அங்கமென ஆகிவிடுவபர்” என உணர்ச்சியின் கொடிக்கொம்பில் ஏறத் தொடங்கியவர் பின் மெல்லச் சிரித்து மீண்டு “அந்த வீரனின் முகத்தை நீ நேரில் பார்த்திருக்கிறாயா பிறையா. போரென்றால் உருகம் உயர்த்தும் பெரும்புலியென்றும் படைக் குடிலென்றால் மதுச் சிரிப்பால் மயக்கூட்டும் குறும்பனென்றும் ஆகும் நீலழகனின் முகத்தை நீ பார்த்திருக்கிறாயா பிறையா. நான் பார்த்திருக்கிறேன். இந்தக் குடியை ஒருவன் காக்கலாம் என்றால் அது அவரன்றிப் பிறிதெவரும் அல்ல என்பதை நீ அறிவாய். உனக்கு இன்னமும் காலமிருக்கிறது” என மெல்லிய கணீர்க் குரலில் சொல்லி அவன் கைகளில் இரண்டு தட்டுத் தட்டிவிட்டு மதுக்குவளையை எடுத்தார். இளம் பிறையன் விழிகள் அருகிருந்த சோதியனைத் தொட்டு மீண்டன. சோதியன் மயங்கிச் சரிந்து கிடந்த அரூபியின் மூடிய விழிகளை நோக்கியபடியிருந்தான். அவளது மூச்சு சீராக இறங்கி ஏறிக் கொண்டிருந்தது. அவளின் முகத்தில் வழிந்த வியர்வை ஆடியில் ஓடும் பனியின் நீர்க்கோடுகள் என அவளைத் துலக்கி ஒளிவிடச் செய்தது.

TAGS
Share This