உருக்கும் நெருப்பின் கண்ணீர்

உருக்கும் நெருப்பின் கண்ணீர்

யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தனித்து ஒளிரும் குரலொன்று நமது மொழியில் நிகழ்ந்தது. அதுவரையிருந்த மொழியடுக்கினைத் தனது கனவால் வேறொன்றெனத் திரட்டியது. அதிகாரம் கொப்பளிக்கும் இச் சமூகத்தின் மனசாட்சியை சிலுவையிலறைந்தது. எஸ் போஸ் என்கிற சந்திரபோஸ் சுதாகர் தான் அந்த மகத்தான கவிஞர்.

எஸ்போசின் மொழி ஒரு பழஞ்சுரங்கத்தைப்போன்றது, அதற்குளிருந்து மந்திரம் நிறைந்த வார்த்தைகளை எடுத்துவைத்து ஓர் பிரமாண்டமான வாழ்க்கையை அவர் நம்முன் நிகழ்த்திக்காட்டுகிறார். அவரது கவிதைகளுக்குள் நுழையும் உயிரிகளும் மனநிலைகளும் கொதித்துக் கொண்டிருக்கும் உலையெனவே வாழ்ந்துகொண்டிருக்கும் மனத்துள் உறைந்து விடுகின்றன. தீவிரம் மொழியில் ஒரு உயிரென நிகழ்ந்தால் அது தான் எஸ் போஸ்.

அவரது கவிதைகள் தனது சொற் தேர்வினாலும் இசையொழுங்காலும் கரிசனம் கொள்ளும் வாழ்வினாலும் கனல் கொள்பவை. அவை அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா அல்லது அதிகாரத்திற்கு எதிரான எமது இருதயங்களைச் சிலுவையிலறைவதா என்று கேட்பது ஒரு சமூகத்தின் இதயத்துடிப்பிலிருந்து எழும் கேள்வி. அடிவயிற்றிலிருந்து வெடிக்கும் குரல்.

எஸ் போசின் கவிதைகளின் மொழியுடல் ஆயுத மனிதர்கள் வீதிகளில் அலையும் போது தெருக்கள் அடையும் அச்சமென விறைத்திருப்பவை. அக் கவிதைகளின் ஆன்மா அதனுள் வாழும் மனிதர்களின் வாழ்வின் மீதான தீராத பிடிப்பின் உறுதியென உரம் கொண்டிருப்பவை.

எஸ் போசின் மொழியுடலிலிருந்து கிளை பிரியும் நதிகளெனப் பலரும் அவரது சொல்லுலகிலிருந்து உருவாகி வந்திருக்கிறார்கள். சித்தாந்தனும் தானா விஷ்ணுவும் அதற்கான சிறந்த உதாரணங்கள். நதியில் படகென எஸ் போஸ் அவர்களின் கவிதைகளிலும் மிதந்து வருகிறார்.

அவரது கவிதைகள் உண்டாக்கும் உளச் சித்திரங்கள் கொடுங்கனவிலிருந்து விழிக்க நினைக்கும் குழந்தையின் தீவிரம் மிக நெளியும் முகபாவனைகளுடன் வாழ்வை அணுகுபவை. அதே நேரம் பரிசளிக்க விரும்பும் மிக உயர்ந்த ஒன்றென நிகர் வாழ்வை, அக் குழந்தைக்கு முலையூட்டும் தாயின் கருணையுடன் உவந்தளிப்பவை.

*

சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம்

என் அன்புக்கினிய தோழர்களே
எனது காதலியிடம் சொல்லுங்கள்
ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த
வனாந்தரத்திலிருந்து
ஒரு மிருகம் என்ன இழுத்துச்சென்றுவிட்டது
கடைசியாக நான் அவழுக்கு முத்தமிடவில்லை
அவளது கண்களின் வழமையாயிருக்கும் ஒளியை நான் காணவில்லை
கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது
கடைசிவரை நட்சத்திரங்களையோ புறாக்களையோ
எதிர்பார்த்த அவளுக்கு சொல்லுங்கள்
எனது காலத்திலும் எனது காலமாயிருந்த
அவளது காலத்திலும் நான் அவற்றை காணவில்லை
என்ன ஒரு மிருகம் இழுத்துச்சென்றுவிட்டது.

நான்.
இனிமேல்
எனது சித்திரவதை காலங்களை
அவளுக்கு ஞாபகப்படுத்த முடியாது
எனவே தோழர்களே
நான் திரும்ப மாட்டேன் என்றோ அல்லது
மண்டையினுள் குருதிக்கசிவாலோ
இரத்தம் கக்கியோ
சூரியன் வெளிவா அஞ்சிய ஒருகாலத்தில்
நான் செத்துப்போவேன் என்பது பற்றிச்சொல்லுங்கள்.

நம்பிக்கயைற்ற இந்த வார்த்தைகள்
நான் அவளுக்கு பரிசளிப்பது
இதுவே முதற்தடவை எனினும் அவளிடம் சொல்லுங்கள்
அவர்கள் எனது இருதயத்தை நசுக்கிவிட்டர்கள்
மூளைய நசுக்கிவிட்டார்கள்
என்னால் காற்றை உணரமுடியவில்லை.

*

விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக் குறிப்பு

நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்
உனது தோள்களில்
தோட்டாக் கோர்வைகளும் பதவிப் பட்டிகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன
கண்மூடித்தனமாய்
உன்னை நான் எப்படி வர்ணிப்பது
என்னிலிருந்து அஞ்சித் தெறிக்கின்றன சொற்கள்
மழிக்கப்பட்ட உனது முகத்தில்
ஈ கூட உட்கார அஞ்சுகிறது
உனது வரவைக் குறித்து
யாரும் மதுக்கிண்ணங்களை உயர்த்தவில்லையாயினும்
துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்
நீயே உனது வெற்றியைச் சொல்லியபடி

இருண்ட காலத்தின் இதே குரலில் பாடிய
துரதிர்ஷ்டம் மிக்க பாடல்களனைத்தையும்
மணல் மூடிற்று… நேற்றிரவு அதன் கோரைப் புற்களின் மிகச் சிறிய
முளைகளை நான் கண்டேன்
நெஞ்சில் மிதித்தபடியாய் பீரங்கி வண்டிகள் நகர்கின்றன
கிராமங்களையும் சிதைத்தழிக்கப்பட்ட
பழைய நகரங்களையும் நோக்கி
எனது விரல்கள், எப்போதும் நடுக்கமுறாத எனது விரல்கள்
உனது விழியில் நடுங்குகின்றன
நீயோ சொற்களாலும் துப்பாக்கியாலும்
எனது மனிதர்களின் நெஞ்சுக் கூட்டில் ஓங்கி அடிக்கிறாய்
என்னிடமோ
உனது நெஞ்சு வெடித்துச் சிதறம்படியாய்
அடித்துச் சாய்ப்பதற்கு எதுவுமேயில்லை
எனினும்
துடிக்கும் எனது கைகளால் ஓங்கியொரு அறை விடவே விரும்புறேன்
உனது கன்னத்தில்
விலங்கிடப்பட்ட எனது கணத்தில், நீ துப்பாக்கி இழுத்துக் கொண்டு
நடந்து வருகிறாய்

யாரோ சொன்னார்கள்
அவனிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கியெறி
பதவிகளால் தொங்கிக் கொண்டிருக்கும்
சீருடையைக் கிழித்து வீசு
ஒரு தந்தையாய், குழந்தையின் நிலவு நாளொன்றின் தயார்ப்படுத்தலுக்காக
உழைக்கவும்
தாய் தந்தையரின் எதிர்பார்ப்பிற்காக துயருறவும் கூடிய மிகச் சாதாரணமான மனிதனாய்
உன்னைப் போலவே மாற்று அவனை
அல்லது நானுனக்குச் சொல்கிறேன்
அவனது துப்பாக்கி உன்னை நோக்கியிருக்காத தருணத்தில்
அந்தச் சனியனை
கணத்தில், அவன் எதிர்பார்க்காத கணத்தில்
அவனை நோக்கித் திருப்பு
உனக்கு முன்னரே அவனது குடலிற் புதையும் அவனது உயிர்
நீ அஞ்சாதே
உன்னை அவர்கள் கொல்வார்கள்
நிச்சயமாக நீயே அதை உணர்வாய்
அப்பரிசு
நிச்சயமற்ற உனது காலத்தில்
எப்போதாவது உனக்குக் கிடைக்கத்தான் போகிறது
வசத்தால், நீ தந்தையென்பதை அவர்கள் மறுத்ததைப்போலவே
நீ ஒரு பெண்ணை நேசிக்கிறாய் என்பதையும், அவள் உனக்காகவே
வாழ்கிறாள் என்பதையும்
அவர்கள் மறுத்ததைப் போலவே
உனது தாயின் கண்ணீரை, அவர்கள் துப்பாக்கியின் நெருப்பில்
காய்ச்சியதைப் போலவே
நீயும் அவனிலிருந்து எல்லாவற்றையும் மறு, சாகும் தருணத்தில்
நான் நினைக்கிறேன்
இந்த யுகத்தின், சிறையில் இருப்பதும்
செத்துப் போவதும் ஒன்றுதான்
உழுத வயல்களே
முளைக்கப் போடப்படாத தானியங்களே
வாழ்வளித்த பன்னெடுங் காலத்தின் நிழலே
சொல்
துப்பாக்கியின் செதுக்கப்பட்ட சிற்பங்களை
உன்னில் நட்டு வைத்தது யார்?
நட்டு வைத்தது யார்?
ஆவர்களை நோக்கி
விரல்களை நீட்டவில்லை எங்களில் யாருமே
மூடிக்கட்டிய பச்சை வண்டிகளில்
யாரையும் விலங்கிட்டுச் செல்லவில்லை துப்பாக்கியின் முனை மழுங்க
எங்களின் குதிரைகளைக் கொன்று
அவர்களின் தேவதைகளைக் கடத்திவரப் போனதேயில்லை எப்போதும்

அவர்களோ சிலுவைகளையும் முள் முடிகளையும் எறிந்தார்கள்
நாங்கள் எழுதிய கவிதைகளில் தீப்பந்தங்களைச் செருகினார்கள்
எமது விழிகள் வரைந்த ஓவியங்களோ
இரவின் காட்சிகளாய் ஒளிமங்கிப் போயின
அவர்கள் தமது குதிரைகளோடு
எமது தேர்ப்பாதைகளெங்கும்
வெறிபிடித்தலைந்தார்கள்
கிளம்பிப் படர்ந்த புழுதியில் நேற்றைய எமது ஒளியை
நாங்கள் இழந்தோம்

தெருவின் இருளை இடறும் குடிகாரப் பெண்ணொருத்தியின்
பேச்சில் கிறங்கி
இன்னொரு கூட்டம்
இதே தெருவில் துணியவிழக் கிடக்கிறது
வெட்கித் தலைகுனியும் நீ
போய்விடு
புழுதியில் செத்த ஒளியின் சிறகுகளைத் தேடியாவது
நீ போய்விடு.

(1999)

*

பேய்களின் காலத்தை மறத்தல் அல்லது தப்பியோடுதல்

அழிவு காலத்தில் நீ புலம்பித் தீர்க்கிறாய்
என்றாலும்
கண்களைக் குருடாக்கிக் கொண்டு
நிலவையும் நட்சத்திரங்களையும்
தனது தீராத வலியால் அணைத்தபடி
அழிவுகாலம் தொடர்கிறது
உனக்கும் எனக்குமாக நாங்கள் விதைத்த
நெல்மணிகளை
உனக்கு மட்டுமே பூர்விகமான குடிசையை
நூறு வருடங்களின் பின்பும் எஞ்சியிருந்த மிகப் பழைய
தங்க வளையல்களை
தீராத எல்லைச் சண்டையில்
யாருக்குமற்றிருந்த நிலத்துண்டை;
எல்லாவற்றையும் நாங்கள் இழந்தோம்
நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களிலும்
அழிவின் துயரம் வன்மத்தோடிருக்கிறது
யாருக்குத் தெரியும்
நீ வாழ்ந்து கொண்டிருந்த கடவுளரின் நம்பிக்கை
உன்னைச் சபித்துவிடுமென்று
நீ எப்போதாவது நினைத்திருக்கிறாயா?
இப்படியொரு சாபக்கேட்டை
உனது குழந்தைகளுக்கு
நினைவுறுத்த வேண்டியிருக்குமென்று,
என்றாலும் அது நடந்தே விட்டது; நடந்தே விட்டது;
அவர்கள் வந்து விட்டார்கள்
நீயே சொல்
சாத்தானின் தோட்டத்தில்
தப்பிப் பிழைத்தலற்று வாழ்தல்
சாத்தியமா?

(1999)

*

பூமியின் ஒளி பொருந்திய முகங்கள்
குழந்தைகளினுடையவை.
துயரம் தரும்
கனவுகளையும்
எமது காலங்களையும் அழித்துவிட்டு- எமது காலங்கள் நெருப்பில்
உழல்பவை
குழந்தைகளுக்கானதை அவர்களிடமே கையளிப்போம்.
நம்பிக்கைதரும் ஒரு சூரியனை
அல்லது ஒரு பௌர்ணமியை
மிக மெல்லிய வாசனையையும் இதழ்களையும் உடைய
மல்லிகை மலர்களை
நாங்கள் அவர்களுக்காய் பரிசளிப்போம்.
கந்தக நாற்றம் எமது இருதயங்களில் உறைந்து விட்டதைப்போல
பிரிவின் துயரங்களும்
மன அழுத்தங்களும்
எமது வேர்களை அரித்து தின்று விட்டதைப் போல
அவர்களுடைய இருதயங்களை
அவை தின்றுவிட அனுமதிக்க முடியாது எம்மால்
உண்மையில்
நாம்
இழந்த சந்தோசங்களை
அவர்களின் மூலம் மீட்கும் கனவுகளில் வாழ்கிறோம் எனில்
அவர்களின் குதூகலங்களும் சிரிப்பும்
எமக்குச் சொந்தமானவை எனில்
பூமியின் ஒளி பொருந்திய முகங்களை
அவர்களிடம் பரிசளிப்போம்.

(1998)

*

அழகிய இரவுபற்றிய எனது கவிதைகளில்
எப்போதுமே மிருகங்கள் காவலிருக்கின்றன
மிருகங்கள் பற்றிய அச்சத்தால் அழுகிச்சிதைந்தது நிலவு
நேற்றைய கவிதைகளையும் இன்றைய வாழ்க்கையையும்
நான் இழந்தேன்

எனது கவிதைகளின் காதலையோ
மனச் சுவர்களில் அவை புணரும் காட்சிகளையோ
அவற்றின் அந்தரங்களையோ
வெறியோடு தின்னுகின்றன மிருகங்கள்

துரத்தியடிக்கப்பட்ட ஒரு கவிஞனின்
எல்லையற்ற விதி பற்றியும்
மிருகங்களுடனான அவனது வாழ்வு பற்றியும்
இன்றைய கவிதையை காற்றுத்தானும் எழுதவில்லை

எனது முழுமையையும் மிருகங்கள் உறிஞ்சிய
கவிதைகளின்
பிரேதநதி இழுத்துச் சென்று விட்டது

நூறு தடவைகளுக்கு மேல் நிகழ்ந்தது எனது இறப்பு
நான் இறந்தேன் மீண்டும் மீண்டும்
நூறு தடவைகளுக்கு மேல்
மிருகங்கள் உடலைத் தின்னுகின்றன
கவிதைகளற்ற உடலை உயிரற்ற உடலை.

TAGS
Share This