புலிக்கு அதன் உடலே கானகம்
பெண் தன்னிலை தன் இருப்பின் திறவுகளுக்கு மொழியின் பிரக்ஞ்ஞையில் அறுக்க வேண்டிய தளைகளை, கவிதை ஒரு தோட்டக்காரரைப் போல் தேவையற்றதை வெட்டி, தேவையானவற்றைப் பராமரித்து நீரூற்றிப் பாதுகாத்து வருகிறது.
மொழிக்குள் பெண் குரல்கள் தனது வாழ்வின் ஆதார விசைகளின் உந்துதலை தன் உடல் களைய வேண்டிய புனிதங்களை உள்ளம் பொருள் கொள்ள வேண்டிய தன்னிலைகளை முன்வைத்தபடியே நகர்ந்து வருகிறது.
குட்டி ரேவதி மொழிக்குள் நுழைந்த காலம் தொடக்கம் மொழியின் ஈரலிப்பை பூனை தன் நாவால் தன்னைச் சுத்தப்படுத்தியபடி அழகுபடுத்தியபடி தாவுவதைப் போல உருவாக்கியளித்திருக்கிறார். உடலின் வேட்கை என்ற அரசியலை பெண் தன்னிலையில் குரல்களாகவும் உடலுக்கான கனவுகளாகவும் ஆக்கியளித்தவர்களில் குட்டி ரேவதியும் முதன்மையானவர்.
உடலை ஒரு பாதிக்கப்படும் பொருள் என்ற நிலையிலிருந்து மாற்றி, அது ஒரு கடப்பு ஊடகம், அதன் முழுமையென்பது அதன் எல்லைகளை விரித்துக் கொண்டே செல்லும் மாயத்தாள் போன்றது என்பதை அவரது கவிதைகளின் கூர்மையான வரிகள் உருவாக்கியிருக்கின்றன.
அவரது மொழியின் சங்கீதம், உரையாடும் போது காலில் தாளம் தட்டியபடி உடலசைக்கும் மனிதரைப் போன்றது. கவிதைகள் தீவிரங் கொள்ளும் போதும் கூட அந்த நிதானமான தாளம் பின்னணி இசையென அந்த உக்கிரத்தின் ஆழத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மொழியில் பெண் தன்னிலையின் கோபமும் நியாயமும் வேட்கையுமென எழுந்த கவிதைகள் குட்டி ரேவதியினுடையவை.
*
முலைகள் நான்கு
உடலெங்கும் நீர்மொக்குகளுடன் அவள் எழும்பிவருகையில்
ஒரு மொக்கும் முறியாது நாவினால் பறித்துக்
கனிகளாக்கி உண்பேன்
நீரலை கரையேறிச் சறுக்குவதைப் போல
அவள் இதயத்தின் பெருஞ்சுவாசம்
மார்புகளின் மீது அலையெனப் புரண்டடங்கும்
உள்ளங்கைகளை அகலவிரித்து
இலையின் குழிவோடு உந்தியை விரித்துக்கொடுப்பாள்
ஒரு கிளி கவ்வியிருக்கும் கனியைப் போல
தன்னுடலைத் தானே
ஏந்திவந்து என்னிதழுக்குள் வழங்குவாள்
ஒருவரது பரவசத்தின் தேநீரை மற்றவர் குடித்துக் களிப்போம்
நிரம்பப் புகையும் கூந்தலுக்குள் மூழ்கி
திசை குழம்பி மூச்சுத்திணறி மீளுவேன் நான்
கால்தடங்களால் தரையெங்கும் கிளைத்துக்கிடந்தவள்
நீருக்குள் இறங்கியதோ
பாம்பின் சரவேகம்
மழையின் கனத்த தொடைகளுடன் ஓடிவந்து
பூச்சகதியாக்குவோம் ஒருவரையொருவர்
அவளது தேனடையைச் சுற்றிப் பறந்து
இரைச்சலிடும் என் மூச்சு
பின் விடியற்காலை தோறும்
முலைகள் நான்கும்
விரிந்த தாமரைகளாய் மிதந்து சிரிக்கும்.
*
உடலை விட்டு எப்படி வெளியேறுவது?
பகல் இரவு என்றில்லாது
எலும்பின் மஜ்ஜையும் நிணம் பாய்ந்த வெளிகளும் கூட
ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன
கனவுகளின் பெருவெளிகளாய் சிதறிக்கிடந்த அங்கங்களை
வாரிச்சுருட்டி அள்ளி எடுக்கவே
நூறாண்டுகள் ஆயிற்று
இவ்விடம் இக்கணம் என்னிடம் மிச்சமிருப்பது
இவ்வுடல் மட்டுமே நீ கூட உடனில்லை
புழுக்கள் நெளியும் சிந்தனை வெளியை விசிறி விசிறி
தின்றுக் கொழுத்தப் புழுக்களிடமிருந்து
எலும்புகளின் திட மிச்சங்களைப் பொறுக்கி எடுப்பதற்கே
வாழ்வின் வறண்ட பாலைகளையும் பாறைகளையும்
கடக்க வேண்டியிருந்தது
மொழியைத் துலக்கித் தான் கண்கள் என்றும்
செய்து கொள்ளமுடிந்தது
கங்குகள் விரித்த பாதைகள் எங்கும்
வரலாற்றின் பொதிகளைச் சுமந்து வந்திருக்கிறேன்
இன்னும் இன்றும் கூட
யாக்கை என்பது வாக்கிற்கும் உன் தீண்டலுக்கும்
வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கருவறைச் சிற்பம்
நீ உருவி எடுத்த பின்னும் உன் குறியை மறந்து
சிந்தித்துக் கொண்டிருக்கும் கலையைச்
செய்து கொண்டிருக்கும் உடல்
உன்னுடன் வெளிகளுக்கிடையே
வேகமாய்ப் பயணித்தும் கொண்டிருக்கும்
நீ நினைப்பது போல உடல் சொற்பமுமன்று
நான் நினைத்திருப்பது போல
அது அற்புதமாய் இல்லாமலும் போகலாம்
அற்பங்களால் கட்டியெழுப்பப்பட்ட உடலை
இன்னது இதுவென சுட்டிக்காட்ட நான் மட்டுமே
எஞ்சியிருக்கிறேன்
என் காலடியில் உடலை எறிந்து விட்டு எட்டப் போ
அல்ல அதற்கு உன் யாக்கையை அறிமுகப்படுத்து
உன்னால் இப்பொழுது இயலாது என நான் அறிவேன்
இன்னும் உனக்கும் ஒரு நூறு ஆண்டுகளேனும் ஆகும்
ஆகட்டும் அதற்குள் என் உடலுக்கு
சில நூறு வானங்களையேனும் விரிக்க வேண்டும்.
*
அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்
என் அரைப்பாவாடையெங்கும் செம்பருத்திப் பூக்கள்
வேலியின் முட்கம்பிகளுக்கு இடையே
அதன் கிளைகள் சிக்கிக் கொண்டிருக்கவில்லை
அரைப்பாவாடை முழுக்க செம்பருத்திப் பூக்களை
நீர் ஓவியங்களாய் வரைந்திருக்கிறேன்
உடல் வளர வளர அரைப்பாவாடையில் பூக்களும்
அதிகமாக முகிழ்க்கின்றன
என்னுடல் ஆணாய் இருப்பதும்
நீங்கள் என்னை பெட்டை என்று அழைப்பதும்
பூக்களற்ற உடையாக்குகின்றன என் அரைப்பாவாடையை
நீங்கள் இருந்து விட்டுப் போங்கள்
ஆண் உடலில் அறையப்பட்டதால் ஆணாகவும்
பெண் உடலில் புகுத்தப்பட்டதால் பெண்ணாகவும்
என் அரைப்பாவாடை முழுக்க செம்பருத்திப் பூக்கள்
சுழன்றாடுகையில் பாவாடை காற்றில் மிதக்க
செம்பருத்திப் பூக்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கின்றன.
ரகசியங்கள் சருகுகளாய் சரசரக்கின்றன
உடலின் எல்லைகளை பெயர்களால் வரையாதீர்கள்
அல்லது குறிகளால் குறிக்காதீர்கள்
உடல் முழுக்க போதையுடன் இச்சையுடன் எழுந்து
பறக்கிறது செம்பருத்திப் பூக்கள் பூத்த அரைப்பாவாடை
அவ்வுலகத்தின் மையமாகிச் சுழல்கிறேன் நான்.
*
மாயக்குதிரை
நண்பனுக்கு உடல் என்பது காட்சிப்பொருள்
தொடரும் ஒரு புதிர், தங்கைக்கு
அம்மாவுக்கு அது நிரந்தரப் புனிதம், கடவுளின் அழுக்கு
அப்பாவுக்கு பாதுகாத்து சேமிக்க வேண்டிய நாணயம்
ஊர்க்குளத்தில் உடலைக் கொத்தும் மீன்களிடம்
சிக்கிக் கொண்டபோது திறந்து கொண்டது என் உடல்
உறுப்பை அவை திருடிச் சென்று தாமரையின் இலைகளில்
உருட்டி உருட்டி விளையாடின வைரக்குமிழ் என்றன
பாட்டி சொல்லியிருக்கிறாள் உடல் அவளுக்கு அணிகலன்
புலிக்கு அதன் உடலே கானகம்
என்னுடைய மழலைக்கு அது ஓர் அணையாத சூரியன்
காதலனுக்கு தாமரைகள் பூக்கும் தடாகம்
எனக்கோ என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
எந்த உறுப்பிலும் என் சுயம் இறுக்கிப் பூட்டப்படாமல்
நிதம் தோன்றும் உணர்வுப் புரவியேறி விடுதலை காணும்
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பறந்து போன உறுப்புகளை பறந்து கொணர
எனக்கு என் யாக்கை நான் ஏறிக் கொண்ட மாயக்குதிரை
பெண்ணுமில்லை ஆணுமில்லை பெண்ணிலுமில்லை
ஆணிலுமில்லை நான் வளர்க்கும் மாயக்குதிரை.
*
கதம்பம்
உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து தழுவிச் சென்றார்
இரவின் கடும் இருட்டின் கரையிலும்
பொழுதற்ற வேளையிலும்
யார் வந்து தொடுகிறார்
மணம் கவ்விய பெரு நீரோட்டத்தில்
உடல் குழைந்து சாகும் வேளை
யாரும் ஏதும் சொல்லிலார்
நரம்புகள் தோறும் பெருவெள்ளம் பாய
செஞ்சந்தனம் குளிர
யார் வந்து அணைக்கிறார்
காலமென்ற வேதனையைக்
மண்குடமதில் நீராக்கி
கணக்கில்லாமல் சுமக்கும் போது
யார் வந்து கை மாற்றுவார்
கண்ணிலார் காதிலார் மனமிலார்
எண்ணிலார் இம்மண்ணிலே
ஒன்றாகக் குழுமிடவே
யார் வித்தை செய்திட்டார்
உடல் என்ற பூக்குடலை
வாட வாட நிறைக்கவே
யார் விரித்தார் இப்பூவனத்தை
உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து போகிறார்.
*
இனி வேட்டை என்முறை
அது ஒரு வேட்டையின் கணம் என்று
சொல்லத் தேவையில்லை
அவன் என்னுடல் நிலத்தின் மேலிருந்தான்
அவன் எடையின் அழுத்தமும்
மூச்சின் விசைக்கும் கீழிருந்தேன்
நானங்கே நரம்புகளால் நாண் இழுத்த வேகத்தில்
அவன் மல்லாந்து எதிரே விழுந்தான்
இப்பொழுது வேட்டையின் என் முறை
நான் அவனை மூர்ச்சிக்கச் செய்தேன்
அம்புகள் தீர்ந்து போயிருந்த அம்பாரியில்
மூர்ச்சிக்கச் செய்யும் முத்தங்களின் கனிகளுடன்
நிணம் பெய்யும் வானத்தைப் போல இருந்தேன்
ஒரு மிருகமாய் மாற்றி அவனைத் தூக்கிச்சுமந்து
வனத்தைச் சுற்றி வந்தேன்
இனி இறைச்சியின்றி ஒரு கணமும்
என் வேட்கை தணியாது.
*
கரையேதுமில்லை
மீன்கள் அள்ளிய வலையாய்க் கடலை
கரையிழுத்து வந்த அதிகாலைப் பெண்டிர் நாம்
இரவின் ரகசியங்களைக் கிழிக்கும் மூர்க்கத்துடன்
நம்மிருவரின் கணக்கற்ற இயக்கங்களாலான உடல்களால்
இரவின் நீலவர்ணத்தை அளந்தவர்கள் தோலுரித்தவர்கள் நாம்
அங்கே தந்திரங்கள் ஏதுமில்லை
கடலை அளக்க நீந்திய இரு மீன் குஞ்சுகளைப் போல
அளந்து நடக்கப்பணித்த கால்களைத் துறந்தோம்
நீந்தி நீந்திக் கரை மறந்தோம்
ஆழக்கடலில் சூரியன் தெரிந்தது
மெலிந்த உதடால் மழைநீரின் ஒவ்வொரு துளியையும்
கவ்விச் சுவைத்த முத்துச்சிப்பியைப் போல்
உன் காமத்தின் பெருமழையைத் துளித்துளியாய்க் குடித்தேன்
உன் காதல் என்னிடம் மண்டியிட்டது
என் காதல் உன்னிடம் முறையிட்டது
எத்தனை முறை கரை எழுப்பினாலும்
அதை அழிக்கும் அலை வேகத்துடன் புரண்டெழுந்தது
கரையில் சூரியன் எழுந்தது
நம் காதலர் தலைமீது
நாம் சவுட்டிய பாதங்களை
அவர்கள் தம் உள்ளங்கைகளில் வாங்கினார்கள்
பருகினார்கள் நம் காதலின் கன மழையை
கரையேறிக்கிடந்தோம் ஆழம் துளைத்த வாகையுடன்
மழை தீர்ந்து சிவப்பேறிய அதிகாலை
நமக்கு மேலே நீர்ப்பறவைகள் பறந்து போயின
பேரின்பக் கூவலிட்டு
மணமேடை ஏறி நின்று
கருத்த திண்முலைகளைப் பரிசளிக்கத் தயாரானாய்
என் முத்தங்களால் தொடுத்திருந்த அம்மணமாலை
உதிர்த்து ஒவ்வொன்றையும் நட்சத்திரம் ஆக்குபவனுக்கு
இப்பொழுதும் உனக்காய் வானத்தை விரிப்பேன்
என் மடியில் கடலலைகள் ஆர்ப்பரிக்க.