தும்பி: 82

“சிறந்த கதைகள் உண்மையைத் தேடும் ஒரு உந்துதலிலிருந்து உருவாகின்றன…அவை நம்மை நத்தையூர்ந்து செல்வது போல மெல்ல மெல்ல செயலில் உந்தும், பணிவாக்கும், நாம் அறியாத மனிதர்களுடன் மனதளவில் கனிவிரக்கம் கொள்ளச் செய்யும். அந்த மனிதர்களைப் பற்றிக் கற்பனை செய்ய உதவும். அவர்களை கற்பனை செய்யும் போது அவர்களும் நம்மைப்போன்றவர்கள் என்ற பரிவுணர்வு மனதில் நிலைத்திடும்.”
தும்பி சிறார் இதழின் 82வது இதழ் அச்சாகி அந்தியூர் மலை அடிவார பழங்குடி கிராமமான கிணத்தடி சோழகாவில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் பிஞ்சு கரங்களில் வழி வெளியானது. சிறிது கால இடைநிறுத்திற்குப் பின் தும்பி இதழ் புதிய சிறகசைத்து பறப்பது ஒரு குழந்தையின் உளவேண்டலாகவே உணர்கிறோம். இந்த தும்பி இதழ் ஹிரோஷிமாவில் 1945ம் ஆண்டு வீசப்பட்ட அணுகுண்டின் கதிர்வீச்சால் நோயுற்று, தன் உயிர் பிரியும் வரை பிரார்த்தனை கொக்குகள் செய்த சிறுமி சடாகோ சசாகியின் ஓவியக் கதையை ஏந்தி வந்துள்ளது. சடகோவின் கதையை மனதிலேந்தி வளரும் குழந்தைகள் ‘யாருக்கானது போர்?’ என்று நிச்சயம் கேள்வி எழுப்புவார்கள் என நம்புகிறோம். உலகனைத்திலும் போர்சூழலில் வாழும் குழந்தைகளின் அகத்தவிப்பு நீங்க பிரார்த்திக்கிறோம்.
“எங்கள் எல்லோரின் அழுகுரல்,
எல்லோரின் தொழுகை,
எல்லோரின் பிரார்த்தனை
உலக அமைதி ஒன்றே”
நன்றியுடன்,
தும்பி சிறார் இதழ்
பேச: 9843870059, thumbigal@gmail.com